

புதுடெல்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
எஸ்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் எம்.வீரபாண்டியன் உள்ளிட்டோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிஹார், மேற்கு வங்க மாநிலங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை எதிர்த்த மனுக்களுடன், எஸ்ஐஆரை தள்ளி வைக்க கேரள அரசின் மனுவுடன் தமிழக கட்சிகள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அமர்வு விசாரிக்கிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் செயலர் பவன் திவான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிக்கை அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தையும் மீறவில்லை. தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி தேர்தலின் புனிதத்தை காப்பாற்றவே மேற்கொள்ளப்படுகிறது.
வாக்காளர்களின் குடியுரிமையை சரிபார்க்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்ற வாதம் தவறானது. குடியுரிமை சரிபார்க்க தாமாக விசாரிக்க மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தின் 22-ஆவது பிரிவின்கீழ் தேர்தல் பதிவு அலுவலருக்கு அதிகாரம் உள்ளது.
எஸ்ஐஆர் பணியை எந்த தொகுதிக்கும், எப்போது வேண்டுமானாலும் நடத்த ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கிலும், அரசியல் லாபத்துக்காகவும், தவறான பிரச்சாரம் நோக்கிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.