

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 71 வயது முதியவருக்கு ஒரு வீடியோ தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தான் சிபிஐ அதிகாரி என்றும் ஆதார் எண்ணை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மிரட்டியுள்ளனர். அதை கேட்டு முதியவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், மோசடி கும்பல் போலி எப்ஐஆர் நகலையும், மும்பையில் ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தி கனரா வங்கியில் கணக்கு தொடங்கியதற்கான நகல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை வீடியோவில் காண்பித்துள்ளனர்.
பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கவும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளது. ‘டிஜிட்டல் அரஸ்ட்’டில் சிக்கிய முதியவர் அவர்கள் கூறியபடி பணத்தை அனுப்பினார்.
கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் ரூ.1 கோடியே 92 லட்சத்து 50,070-ஐ முதியவர் அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஹைதராபாத்தை சேர்ந்த பண்டு வினித் ராஜ் ஜி, திருப்பதைய்யா, கவுனி விஸ்வநாதம் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெலங்கானா உட்பட நாட்டின் 5 பகுதிகளில் இவர்கள் இதுபோல் சைபர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளி சந்தீப் என்கிற அலெக்ஸ் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.