

சென்னை: முதல் தலைமுறை வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் முறை தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வாக்குச்சாவடியில் வாசலில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டு இருக்கும். அதில், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
அதில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை உறுதி செய்த பிறகு முதலில் வாக்குச்சாவடி அலுவலரிடம் (பிஓ-1) இடம் பெயர், வாக்காளர் அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணத்தைக் காட்ட வேண்டும்.
இதனையடுத்து உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை பிஓ-1 பார்த்துவிட்டு, உங்கள் பெயரை சத்தமாக படிப்பார். உடனே அங்கிருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் தங்களிடம் உள்ள பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்பதைச் சரி பார்ப்பார்கள்.
அடுத்து, பிஓ-2-வது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் 17ஏ என்ற பதிவேட்டில் உங்களின் கையெழுத்தைப் பெறுவார். பின்னர் உங்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பார். பின்னர் வரிசை எண் கொண்ட சிலிப் ஒன்றை தருவார்.
அதைப் பெற்றுக்கொண்டு பிஓ-3 அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அந்த சிலிப்பை வாங்கிக்கொண்டு தன்னிடம் இருக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தின் பட்டனை அழுத்துவார். வாக்குப்பதிவு செய்வதற்காக மறைவாக அமைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கு நீங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிரே இருக்கும் நீலவண்ணப் பட்டனை அழுத்தி தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். அப்போது நீண்ட பீப் சத்தம் கேட்கும். அப்படியானால் உங்கள் வாக்கு பதிவாகிவிட்டது என்று அர்த்தம்.
உடனே அருகில் இருக்கும் விவிபாட் எந்திரத்தின் மானிட்டரில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவருக்கான சின்னம் போன்ற விவரம் அடங்கிய சீட்டு தெரியும்.
7 நொடிகள் மட்டுமே அதைப் பார்க்க முடியும். பின்னர் அந்தச் சீட்டு அந்த விவிபாட் எந்திரத்திற்குள்ளேயே விழுந்துவிடும். இந்த நடவடிக்கைகள் முடிந்ததும், வெளியே வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.