

புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, ‘‘வாக்கு மையங் களில், உதயசூரியன் சின்னம் அச்சிட்ட பூத் சிலிப் விநியோகம் செய்தது தேர்தல் முறைகேடு” என்று வாதிட்டார்.
அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா என்று கேட்ட நீதிபதிகள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி விசாரணையை பிப்.17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.