

நாமக்கல்: மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் முட்டை உற்பத்தியில் தமிழகம் 2-ம் இடம் வகிக்கிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு முட்டைஏற்றுமதி செய்வதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 60 லட்சம் முதல் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், ஓமான், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதிசெய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, முட்டை ஏற்றுமதி முழுமையாக தடைபட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்யவும் இயலாத நிலை உள்ளது. அதனால் முட்டைகள் அனைத்தும் தற்போது உள்ளூர் சந்தைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் முட்டை விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 540 பைசாவாக இருந்தது. இது தற்போது 405 பைசாவாக உள்ளது.
ஒரு முட்டை உற்பத்தி செய்ய 450 பைசா செலவு ஆகிறது. இச்சூழலில் 400 பைசாவுக்கும் குறைவாக விற்பனை செய்தால் ஒரு முட்டைக்கு சுமார் 50 பைசா வுக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.
அதேவேளையில் போர் நீடிக்கும்பட்சத்தில் தீவன மூலப்பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இது பண்ணையாளர்களைகவலையடைச் செய்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து இதுவரை ஏற்றுமதி நடைபெறாத தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.