“நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும்” - செங்கோட்டையனை போட்டுத் தாக்கிய இபிஎஸ்

“நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும்” - செங்கோட்டையனை போட்டுத் தாக்கிய இபிஎஸ்
Updated on
2 min read

“நல்ல பண்பு இருக்கவேண்டும். வாய்க்கு வந்த மாதிரி பேசக்கூடாது. வயதுக்கு ஏத்த மாதிரி பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சுவரும்” என செங்கோட்டையனை எச்சரிக்கும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரபு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நல்லவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். இப்போது இருக்கும் எம்எல்ஏ மாதிரி திமிர் பிடித்தவர் இல்லை. இதுவரை அடிமையாக இருந்தீர்கள். இனிமேல் சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள்.

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இங்கு எம்எல்ஏ-வாக இருப்பவர் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர், தானாக எம்எல்ஏ ஆகவில்லை. அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்எல்ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று அம்மா பாணியைக் கடைப்பிடித்தோம்.

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விடமாட்டார். மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? அனைவரது மனைவியும், தனது கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது, கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு.

நான் அப்போது கீழே தான் இருந்தேன். ஜெயலலிதாவிடம் அவர்கள் பேசினார்கள். படிக்கட்டில் இருந்து இறங்கியதும் அவரை பதவியைவிட்டு இறக்கிவிட்டார். பிறகு என்னை அழைத்து “இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பாப் போச்சு. இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை. இவரெல்லாம் மோசமான மனிதர்” என்றார் ஜெயலலிதா.

அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கியது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன். இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா? “நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள்” என்று கெஞ்சினார்.

ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார். இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன். அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் திமுக-வின் உளவாளி என்று எப்போதோ கண்டுபிடித்தாகிவிட்டது. சட்டப்பேரவையில் ஒரு வார்த்தை கூட திமுக-வை எதிர்த்துப் பேசியது கிடையாது. இவரை கட்சியில் வைத்திருக்கலாமா? வாக்களித்த உங்களுக்கும் அவர் விசுவாசமாக இல்லை.

கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில் வைத்திருக்கிறார்..? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா?

செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். நாக்கு இருக்கிறது என்று அசிங்கமாகப் பேசினால் சாலையில் நடக்க முடியாது. அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன். நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டேன்.

நீங்கள் எப்படியும் அதிமுக-வை வீழ்த்த திமுக-வுடன் சேர்ந்து சதி செய்வீர்கள் என்று தெரியும். நான் இந்தத் தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன். நீங்கள் சவால் விட முடியுமா? என் தொகுதி மக்கள், குடும்பத்தில் ஒருவனாக என்னைப் பார்க்கிறார்கள். என் மக்களை நீதிபதி அந்தஸ்தில் பார்க்கிறேன். நீங்கள் தொகுதி மக்களை அடிமையாகப் பார்க்கிறீர்கள். இனி ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

எனது முகத்தின் ஒரு பக்கத்தைத் தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை. நான் எதற்கும் துணிந்தவன். ஸ்டாலின் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவன் நான். என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவரே தடுமாறுகிறார்.

ஸ்டாலினுக்கு நீங்கள் துணை போனது தெரிந்தும் நான் பக்கத்தில் வைத்திருந்தேன். நல்ல பண்பு இருக்கவேண்டும். வாய்க்கு வந்த மாதிரி பேசக்கூடாது. வயதுக்கு ஏத்த மாதிரி பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சுவரும். இவ்வாறு அவர் பேசினார்.

“நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும்” - செங்கோட்டையனை போட்டுத் தாக்கிய இபிஎஸ்
அதிமுக அடிமைகளிடம் மீண்டும் தமிழகம் சிக்கிவிடக் கூடாது: ஸ்டாலின் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in