

சென்னை: தமிழகத்தில் பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதிதாக 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள், பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான சேவைகளை வழங்கவும் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கெனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நெல்லை, கோவை, சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மண்டலத்தில் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, மதுரை மண்டலத்தில் மதுரை, கரூர், ஈரோடு ஆகிய மின்பகிர்மான மண்டலங்களில் உள்ள காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் நிர்வாகம், கண்காணிப்பு, செயல்பாட்டு பணிகள் உதவி செயற்பொறியாளர்களின் தலைமையில் மேற்கொள்ளப்படும்.
இவற்றின் செயல்பாட்டை வலுப்படுத்த தலைமையகத்தில் தனித் திட்ட அமலாக்கம், கண்காணிப்புக்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், மின்உற்பத்தியை வெளியேற்ற தேவையான உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்குதல் போன்றவை அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பயனாக காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் காலம் குறைக்கப்பட்டு, திட்டசெயல்பாடுகள் விரைவுபடுத்தப் பட்டு முதலீட்டாளர்கள், மின் உற்பத்தியாளர்களுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்குவதன் மூலமாக பசுமை மின்சார உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.