

சென்னை: தமிழகத்தில் மின்விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்க்கு மின்சாரத்தை விநியோகம் செய்து வருகிறது. அனைத்து நுகர்வோருக்கும் முறையாக மின்சாரம் கொண்டு சேர்க்கும் வகையில், சென்னையில் நிலத்துக்கு அடியில் புதைவடங்களாகவும், மற்ற இடங்களில் மின் கம்பங்கள் வாயிலாகவும் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், நிலத்துக்கு அடியில் உள்ள கேபிள்களில் இருந்து மின்கசிவு ஏற்பட்டும் சில நேரங்களில் பாதிப்புகள் நேரிடுகின்றன. இதன் மூலம் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மின் விபத்து காரணமாக உயிரிழப்போரின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம், இரு கைகள், கால்கள், கண்களை இழந்தால் ரூ.3 லட்சம், ஒரு கை, கால், கண்ணை இழந்தால் ரூ.1.50 என லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த இழப்பீடுகளை, மண்டல தலைமைப் பொறியாளரே வழங்கலாம். இருப்பினும், இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து தெடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக, அண்மையில் மின் வாரிய உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, மின் விபத்து காரணமாக உயிரிழந்தார் என்பதை உறுதி செய்ததும், விதிமுறைகளைப் பின்பற்றி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்குமாறும், அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு வழங்குமாறும் தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.