

சென்னை: “சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குத்தான் சென்றேன்; நான் ஓடி ஒளியவில்லை, வரும் 15ம் தேதி விசாரணைக்கு நிச்சயம் ஆஜராவேன்” என, முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில், ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 25-ம் தேதி தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் நேரடியாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை வேலுவுக்கு சம்மன் அனுப்பியது.
அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விளக்க மனுவின் அடிப்படையில் அவரது வழக்கறிஞர்கள் கால அவகாசம் பெற்றனர். அதேநேரத்தில் வேலு தப்பி வெளிநாடுக்கு ஓடிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் சிகிச்சை முடித்து நேற்று வேலு சென்னை திரும்பியபோது செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் சிங்கப்பூரில், மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில், இதயம் தொடர்பான சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
அந்த வகையில் மீண்டும் பரிசோதனைகு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக கடந்த மாதம் 15-ம் தேதி விசாவுக்கு விண்ணப்பித்தேன்; 17-ல் விசா கிடைத்தது. 25-ல் டிக்கெட் முன்பதிவு செய்தேன். அன்றைய தினம் என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர்.
அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அன்றைய பயணத்தை ரத்து செய்து, மறுநாள் 26-ம் தேதி சிங்கப்பூர் சென்றேன். அங்கு ஒவ்வாமை சிகிச்சைக்காக பல நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனையில் இருந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியதாக தகவல் கிடைத்தது. உடனடியாக வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி 10 நாட்கள் அவகாசம் கேட்டேன்.
மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் சிகிச்சை முடிந்த பிறகு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன். ஓடுறாங்க, ஒளியுறாங்க என்ற குற்றச்சாட்டுகளில், எந்த உண்மையும் இல்லை. நான் ஓடி ஒளியவில்லை.
சிங்கப்பூரில் சிகிச்சைக்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. வரும் 15-ம் தேதி விசாரணைக்கு நிச்சயம் ஆஜராவேன். ஜூலை 12-ம் தேதிக்குப் பிறகு, எந்த தேதியில் அழைத்தாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.