

சென்னை: அலுமினிய மின் கடத்திகள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல ஆவணங்கள், ஆதாரங்கள் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் 2021 முதல் 2023 வரை மின்சாரத் துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அந்தக் கால கட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் நிறுவனத்துக்கு அலுமினிய மின் கடத்திகள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான பணம் மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக மின் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கடந்த ஜூன் 30-ம் தேதி அடையாளம் தெரியாத அலுவலர்கள், பிற அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்கள் / ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஆகியோர் விநியோகஸ்தர்களுடன் கூட்டு சேர்ந்து தங்களது அதிகாரப்பூர்வ பதவியைத் தவறாகப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த முறைகேடு மூலம் அரசு கருவூலத்துக்குக் கோடிக்கணக்கான பணம் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 2021 முதல் 2023 வரையிலான கால கட்டத்தில், 2,07,495 கிலோ மீட்டர் அலுமினிய மின் கடத்திகளைக் கொள்முதல் செய்வதிலும் முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் மின் வாரிய அதிகாரிகள், முக்கிய நபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 60 இடங்களில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக ஊழியர்கள், பிற அரசு ஊழியர்கள், தனி நபர்கள், அலுமினிய மின் கடத்தி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தபுள்ளிதாரர்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள காசிராஜன் (எ) காசியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இவர், செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது அவரிடம் உதவியாளராகப் பணியாற்றியதாகவும், மின் வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இவரது வீட்டில் ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், பெருங்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் 4 தனியார் நிறுவனங்களிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
மதுரையில்...
ஓய்வு பெற்ற சென்னை மண்டல மின் வாரிய மெட்டீரியல் பிரிவு இயக்குனர் பாஸ்கரனுக்குச் சொந்தமான மதுரை கருப்பாயூரணி, வில்லாபுரம் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சிட்கோ, குஞ்சாண்டியூர், கோனூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்துக்கு மின் கடத்தி பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் நரேந்திரன், நல்லம்மாள், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்தூர் கிராமத்தில் மின்மாற்றிகளுக்குப் பயன்படுத்தப்படும் மின் கம்பிகளைத் தயாரிக்கும் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வம் தலைமையிலான போலீஸார் காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவாகியிருந்த தரவுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பூர்...
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லூரி சாலை, ராம்ஜி நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. ஆய்வாளர் சசிலேகா தலைமையில் திருப்பூர் மற்றும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 12 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிறுவன உரிமையாளர் கிருஷ்ணசாமி (84), திருப்பூர் மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி கடந்த 2000-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என்றும், பின்னர் முகவரியை மாற்றி மின் வாரிய ஒப்பந்த கொள்முதலில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சிக்கிய ஆவணங்கள்
தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக விதிகளை மீறி டெண்டர் வழங்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிதி இழப்பு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைகளின் போது கொள்முதல் முறைகேடு தொடர்பான ஒப்பந்த கோப்புகள், நிதி பரிவர்த்தனை ஆவணங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினித் தரவுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.