

திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனை.
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டது.
அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு சேவை வழங்க அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் (கூடுதல் டிஜிபி) அருண் அப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 4-ம் தேதி தமிழகம் முழுவதிலும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத ரூ.37.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆர்டிஓ (வட்டார போக்குவரத்து அலுவலகம்) அலுவலகங்களில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், தகுதிச் சான்று உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் நேற்று பிற்பகல் முதல் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, சென்னை வளசரவாக்கம் புளியந்தோப்பு, கொளத்தூர், அண்ணாநகர், காஞ்சிபுரம், வேலூர், பூந்தமல்லி, அரக்கோணம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, திருச்சி மேற்கு, அரியலூர், பெரம்பலூர், குளித்தலை, புதுக்கோட்டை ஆலங்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர் மத்தி,பெருந்துறை, நீலகிரி, கூடலூர், தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் தெற்கு,பரமத்திவேலூர், சேலம் மேற்கு, வாடிபட்டி, பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, உத்தமபாளையம், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், காரைக்குடி என 40 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, அலுவலக கதவுகள் மூடப்பட்டு உள்ளே இருந்த அதிகாரிகள், பணியாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களது செல்போன்கள் பெறப்பட்டு தனி இடத்தில் வைக்கப்பட்டன. அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், பண பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் முக்கிய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக பணிகளுடன் தொடர்புடைய நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.31 லட்சத்து 85,700 கைப்பற்றப்பட்டது. மேலும், ஜிபே மூலம் ரூ.5 லட்சத்து 95,468 பரிமாறியதும் கண்டறியப்பட்டது.
குறிப்பாக, ‘ஜிபே’ மூலம் காரைக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம், திருப்பத்தூரில் ரூ.88,580, பெருந்துறையில் ரூ.2,400, ஆலங்குடியில் 1 லட்சத்து 55,850, செங்கல்பட்டில் ரூ.98,688 பெறப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு ரொக்கமாக அதிகபட்சம் மயிலாடுதுறையில் 1 லட்சத்து 75,730 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குடியில் ஜிபே மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ரொக்கமாகவும் ரூ.3,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சோதனை நடைபெற்ற 40 இடங்களிலும் சிறிதும், பெரிதுமாக கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.