

சென்னை: கோவை பெரியார் அறிவுலகம் உள்பட நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அரசு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலக த்தை முதல்வர் விஜய் அக்டோபர் 13-ம் தேதி திறந்துவைத்தார். இந்நூலகத்தை முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், கோவை பெரியார் நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சமூக வலைதளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தவெகவும் முன்பு ஆட்சியில் இருந்த திமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன.
கோவை பெரியார் நூலகத்தை தொடர்ந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றிலும் நூல்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொது நூலகத்துறை இயக்குநர் திடீர் மாற்றம்
நூலகங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்த பிரச்னையில் பொது நூலகத்துறை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான எஸ்.ஜெயந்தி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அந்தப் பொறுப்பிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் ஆர்.வி.ஷஜீவனா, பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஜெயந்தி தொடருவார் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் நூலகங்களுக்கான புத்தகங்கள் வாங்கியதில் உள்ள சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளை தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கல்வி அமைச்சர் ஏ. ராஜ்மோகனை சென்னை கன்னிமாரா நூலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது முறைகேடுகளில் தொடர்புடைய பீனிக்ஸ், சிக்மா, அகல்விளக்கு போன்ற பதிப்பகங்கள், பபாசியில் உறுப்பினராக இல்லை என விளக்கம் அளித்தனர்.
இதை தொடர்ந்து கன்னிமாரா பொது நூலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னிமாரா நூலகத்தில் மட்டும் சுமார் 523 போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏஐ பயன்படுத்தி நூல் எழுதி, நடிகர்கள் பெயர்களை திரித்து போட்டு வெளியிட்டுள்ளனர். கடந்தாண்டே இந்த நூல்கள் வாங்கப்பட்டன. அதற்கான சீல் அந்த நூல்களில் உள்ளது.
அகல்விளக்கு உள்ளிட்ட பதிப்பகங்கள் மூலம் இந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பதிப்பகம் குறித்து புத்தகப் பதிப்பாளர்கள் சங்கமான பபாசிக்கே தெரியவில்லை. அதேபோல், ஜான் டெர்ரிஸ் என்ற சர்வதேச அறிஞர், தான் எழுதாத ஒரு புத்தகம் 2023-ல் மதுரை கலைஞர் நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது ஆட்சியில் இருந்த திமுக இதை எப்படி அனுமதித்தது?
இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூலம் உரிய விசாரணை நடத்தப்படும். தற்போது தமிழக அரசு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் நூலகங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி கலைஞர் நூலகத்திலும் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, இந்த மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையும், சர்ச்சைக்குரிய அகல்விளக்கு பதிப்பகத்தாரிடம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான கூடுதல் டிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவுபோலீஸார் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு நேற்று மாலை சென்று சோதனை நடத்தினர். மேலும், பொது நூலகத்துறை புதிய பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஷாஜீவனா தலைமையில் நூலகத்துறை அதிகாரிகளும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் வீ.அரசு, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் லெ.ஜவகர் நேசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும், அறிவுப்பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். இந்த முறைகேட்டை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தேசவிரோதச் செயலாக கருதி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.