கோவையில் இரு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவையில் இரு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
Updated on
1 min read

கோவை: கோவையில் உள்ள இரு சார் - பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஜூன் 4) சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு பத்திரப் பதிவுக்கு இடைத்தரகர்கள் மூலம் விண்ணப்பதாரர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகம், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சாலையில் உள்ள காந்திபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் ஆகிய இரு அலுவலகங்களில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஜூன் 4) மதியம் சோதனையைத் தொடங்கினர்.

கூடுதல் எஸ்.பி.ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தலா 8 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிந்து மேற்கண்ட இரு இடங்களில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனையை தொடங்கி மேற்கொண்டனர்.

சோதனை நடந்தபோது மேற்கண்ட அலுவலகங்களில் சார் - பதிவாளர்கள் இருந்தனர், ஊழியர்கள் பணிபுரிந்தனர். சோதனையின்போது அங்கு வந்திருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

அங்கு அலுவலர்களின் மேஜைகள், கோப்புகள் வைக்கும் அலமாரிகள், அலுவலர்களின் கைப்பைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இன்று மதியம் தொடங்கிய இந்த சோதனை இரவு வரை தொடர்ந்தது. சோதனையின் முடிவிலே பறிமுதல் செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவை விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

கோவையில் இரு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” - முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in