

துரைமுருகன்
படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: காவிரி விவகாரத்தில் பெங்களூரு வுக்கு செல்வதைவிட முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘காவிரி மேகேதாட்டு விவகாரத்தில் ஜல் சக்தி துறை அமைச்சரின் பதில் அபத்தமான ஒரு ஆபத்தான அறிக்கையை கூறியிருக்கிறார்.
கடந்த 2018 தீர்ப்பில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருக்கிறார்.
இது என்ன ஆபத்து என்றால் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அங்கேயோ, இங்கேயோ எல்லாம் கழித்து விட்டு ஒரு சின்ன தகவலை எடுத்து பேசுகிறார். அமைச்சருக்கு காவிரி விவகாரம் குறித்து அனைத்தும் தெரியாது என்று சொல்ல முடியாது.
அவருக்கு, ஆலோசனை கூற நிறைய பேர் இருக்கிறார்கள். அவர், இவ்வளவு பெரிய தவறு செய்யக்கூடாது. உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை வெளிப்படையாக மீறுவதாகும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நீரை தவிர மற்ற நீரை கர்நாடகா பயன்படுத்திக் கொள்ளலாம் என எங்கும் கூறவில்லை.
இவ்வளவு தெளி வாக நீதிமன்ற உத்தரவில் கூறப் பட்டுள்ளது. ஆனால், அப்படி இருந்தும் எப்படி மத்திய இணை அமைச்சர் சொல்கிறார் என தெரியவில்லை. இதற்கு, இந்த அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை அரசு கொண்டு செல்ல வேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு பெங்களூருக்கு போவதற்கு பதிலாக டெல்லிக்கு போக வேண் டியது தானே.
கர்நாடகா போய் பேசுவது மிகப்பெரிய ஆபத்து. டெல்டாவில் குறுவை பயிர் அனைத்தும் காய்ந்து போய்விட்டது என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
இதேநேரம் ஸ்டாலின் முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் என்னை டெல்லிக்கு விரட்டியிருப்பார். என்னை, தூங்க விட்டு இருக்க மாட்டார். மத்திய அமைச்சர் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு அரசு மறுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.
பெங்களூரு போய் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என அர்த்தம். இந்நேரம் நீர்வளத்துறை அமைச்சர் எழுந்து நின்று இதை கையில் எடுத்து செய்திருக்க வேண்டும். கருணாநிதி எந்த விவகாரமானாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவார்.
ஆனால், இவர்கள் யாரையும் கேட்பதில்லை. இந்த விவகாரத்தை இன்றைய முதல் வர் மக்களின் வாழ்வாதார பிரச் சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைவிட கேவலம் எதுவும் கிடையாது.
தமிழன் தலை குனிய வேண்டும். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே கருப்பு அத்தி யாயம். மத்திய அரசு இந்த நாட்டை கொஞ்சம், கொஞ்சமாக வேறு ஒரு பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை கொஞ்சம் கூட விட்டு கொடுக்கக்கூடாது. காவிரி விவகாரத்தை இந்த அரசு லேசாக எடுத்தால் தமிழ்நாட்டை கொன்று விடுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜெய லலிதா 2 முறை உண்ணாவிரதம் இருந்தார். அந்த உணர்வாவது இருக்க வேண்டும்’’ என்றார்.