

படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் 13-வது முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் வரலாற்று சாதனையில் இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். தமிழக சட்டப்பேரவைக்கான 17-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 13 முறை எம்எல்ஏவாக தேர்வானவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவரது சாதனையை சமன் செய்யும் இடத்தில் திமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளார். 1971-ம் ஆண்டு முதன் முறையாக காட்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், ராணிப்பேட்டை தொகுதியில் 1977 மற்றும் 1980-ம் ஆண்டு களிலும், பிறகு காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
இதில், காட்பாடி தொகுதியில் 1984 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் தோல்வியை தழுவி உள்ளார். அமைச்சர் துரை முருகன் பொதுப்பணி துறை, நீர்வள துறை, சட்ட துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை, மின்சார துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். நீர்வள துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்.
திமுகவில் அண்ணா, மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரை தொடர்ந்து நான்காவதாக திமுகவின் பொதுச் செயலா ளராக அமைச்சர் துரைமுருகன் உள்ளார்.
சென்னை அனைத்து கல்லூரிகள் தமிழ் மன்ற தலைவர், 1965-ல் இந்தி எதிர்ப்பு போரில் முதலில் கைதான மாணவர் தலைவராகவும், அண்ணாவுடன் சிறைவாசம், மிசாவில் ஓராண்டு சிறை, திமுகவில் தணிக்கை குழு உறுப்பினர், மாணவர் அணி செயலாளர், தலைமை கழக முதன்மை செயலாளர், திமுக துணை பொதுச்செயலாளர், திமுக பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
இந்த தேர்தலில் துரை முருகன் 13-வது முறையாக போட்டியிடுவது சாதனையாக கருதப்பட்டது. வயதான காலத்தில் அவர் போட்டியில் இருந்தது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த முறை எப்படியும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அமைச்சர் துரைமுருகன் குடும் பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் வேலை செய்தனர்.
துரைமுருகன் வயதான காலத்தில் ஏன் சாதனைக்காக போட்டியிட வேண்டும் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதி லளித்த துரைமுருகன், ‘எடப்பாடியை என்னுடன் ஓட்டப் பந்தயத்துக்கு வரச்சொல்லுங்கள்’ என்றார்.
இப்படி காட்பாடி தேர்தல் களத்தில் திமுகவும், அதிமுகவும் முண்டியடித்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் தவெக வேட்பாளர் டாக்டர் சுதாகர், தனக்கு தெரிந்த பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வந்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து துரைமுருகன் தரப்பினர் எதிர்பார்த்த எந்த திருப்பு முனையும் களத்தில் ஏற்படுத்த முடியவில்லை என்பது தெரியவந்தது.
1991-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு துரைமுருகன் இந்த தேர்தலில் காட்பாடியில் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.
காட்பாடி தொகுதியில் 2 முறை அதிமுக விடம் வெற்றியை பறிகொடுத்தவர் இந்த முறை தவெகவிடம் பறிகொடுத்துள்ளார். இதன் மூலம், முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 13-வது முறை எம்எல்ஏ ஆகும் சாதனை முறியடிக்கும் அவரது கனவு நிறைவேறவில்லை.