

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.
தமிழக முதல்வர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்தில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று சந்தித்துப் பேசினார். திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை, திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிப்பது உட்பட திருச்சி மாவட்டம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விஜய் முதல்வரான பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன்பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், துரை வைகோ விஜய் குறித்து பாசிட்டிவாக பேசி வருகிறார். மேலும், தவெகவும் ஒரு திராவிட இயக்கம் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதிமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டம் என்றும், இனி எப்போது அடுத்த கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். விரைவில் மதிமுகவும், தவெக பக்கம் சாயும் என சொல்லப்படும் நிலையில், துரை வைகோ முதல்வர் விஜய்யை சந்தித்தது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.