

துரை குமார்
சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி.யாக உள்ள துரை குமாருக்கு, அந்த துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாக வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாமக்கல், கரூர் உள்ளிட்ட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். மதுரை, தாம்பரம் காவல் ஆணையர்கள் உட்பட மேலும் சில காவல் துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். அந்த இடத்துக்கு புதிய அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்பட்டனர். தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொறுப்பு) இருந்த வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.
சேலம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலர், சென்னை காவல் ஆணையரும் புதிதாக நியமிக்கப்பட்டனர். தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமாருக்கு பதிலாக, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறைச் செயலராக இருந்த மணிவாசன் பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (லஞ்ச ஒழிப்புத் துறை) இயக்குநராக இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டார்.
அந்த இடத்துக்கு சைபர் க்ரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, டேவிட்சன் தேவாசிர்வாதம் கூடுதலாக கவனித்து வந்த ஆயுதப்படை டிஜிபி பொறுப்பை மட்டும் சந்தீப் மிட்டலுக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் யார் என்று உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு ஒரு உத்தரவு கடிதத்தை வெளியிட்டது. அதில், ‘லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐ.ஜி.யாக உள்ள துரை குமாருக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, துரை குமார் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த சூழலில், புதிய பணியிடம் வழங்கப்படாத டிஜிபிக்கள் வெங்கடராமன், டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட மேலும் சில காவல் துறை உயர் அதிகாரிகள் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.