

கோப்புப் படம்
நாமக்கல்: சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காகங்கள் நோய் தாக்கி திடீரென இறந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற சுற்றுப்புறங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் இறந்துள்ளன. இறந்த காகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள ஐசிஏஆர்-தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவன ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், இறந்த காகங்களை பறவைக்காய்ச்சல் (எச்5என்1) தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது. இதன்மூலம் வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளையும் தாக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை மனிதர்களை இந்நோய் தாக்கியதாக கண்டறியப்படவில்லை.
தொற்றுநோய் பரவலைத் தடுக்க, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டைக் கோழிகளும், 2 கோடிக்கும் அதிகமான கறிக்கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே அண்டை மாநிலங்களில் பரவி வந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு, தமிழக தலைநகரிலும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாமக்கல்லில் பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இதுகுறித்து பண்ணை உரிமையாளர்கள் கூறும்போது, “நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழிப் பண்ணைகளை அமைத்து நடத்தி வருகிறோம்.
சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ கோழிப்பண்ணை சம்பந்தமான முட்டை, தீவனம் போன்ற பொருட்கள் போக்குவரத்து நடைபெறுவதில்லை. இதனால், நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்பில்லை. கோழிப்பண்ணைகளில் உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றனர்.