மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-க்கு மாற்றம்: நயினார் நாகேந்திரன் தகவல்

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-க்கு மாற்றம்: நயினார் நாகேந்திரன் தகவல்
Updated on
1 min read

நெல்லை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி திமுகவினருக்கு வந்துள்ளது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திமுக நம்புகிறது. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் திமுக போட்டிபோட்டு போராட்டங்களை நடத்தியது. ஆனால், திமுக ஆட்சியில் 33 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் மறைப்பதற்காக ‘டப்பா இன்ஜின்’ என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதை திருவிழாபோல நடத்த உள்ளோம். கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். விஜய்க்கு விதிக்கப்பட்ட வரி ஏய்ப்புக்கான அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இப்போதுதான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

இனி நாங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்த்து `டிரம்' அடிப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்கிருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு போவதுபோல, அங்கிருந்து கழிவுகள் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-க்கு மாற்றம்: நயினார் நாகேந்திரன் தகவல்
குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in