

மதுரை: திராவிட இயக்கம் எனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்தது என மேலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு ஊர்கள் வழியாக பயணித்த அவர் வெள்ளிக்கிழமை மேலூரை வந்தடைந்தார். மேலூரில் கட்சி சார்பில், ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
மதிமுகவின் லட்சிய பயணத்தில் இதுவும் ஒன்று. இந்துகளும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துக்கு, சமத்துவ உணர்வுக்கு அபாயம் நேர்ந்துவிடக்கூடாது என, ஆழ்ந்து சிந்தித்து இந்த சமத்துவ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளேன். எனது பொது வாழ்க்கையில் 62 ஆண்டு கடந்துள்ளது.
1982-ல் மதுரை - திருச்செந்தூர் நோக்கி நடைபயணம் செய்தேன். வாழ்நாளில் 5 அரை ஆண்டு சிறையில் இருந்துள்ளேன். இதை பெருமையாக கருதுவேன். தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து வரும்போது, நடைபயணம் செய்துள்ளேன். முல்லை பெரியாறுக்காக பேசியது தற்போது நினைவுக்கு வருகிறது. தென்மாவட்டங்களை பாதுகாக்க லண்டனில் பிறந்த பென்னிக்குக் அவரது சொத்துக்களை விற்று கட்டினார். இந்த அணை தான் நம்மை தற்போது வாழவைக்கிறது. குடிநீர் தருகிறது. மேலூர் பகுதி விவசாயத்திற்கு உதவுகிறது.
மதுரை- கூடலூர் வரை 3 முறை நடைபயணம் செய்துள்ளோம். எனது நடைபயணம் எல்லாம் அரசியலுக்காக அல்ல. மக்களின் வாழ்வாதாரத்திற்காக. இதுவரை 10 நடைபயணம் செய்துள்ளேன். ஸ்டெர்லைட் மூடப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். நியூட்ரினோத் திட்டம் தடுக்க, மதுரையில் இருந்து பயணத்தை தொடங்கியபோது, பயணம் வெற்றி பெற இன்றைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து அனுப்பினார். இன்று வரையிலும் 14 ஆண்டு அத்திட்டம் வரவில்லை.
வாழ்க்கை என்பது மக்களுக்கென பயன்பட வேண்டும். இந்த ஆயுள் எந்நேரமும் முடியலாம். இயற்கை எனக்கு பேசும் சக்தியை கொடுத்துள்ளது. சாதியின் பெயரால் கையில் வாள் தூக்கக்கூடாது. வெடிகுண்டுகளை எடுக்கக்கூடாது. திருச்சியில் சமத்துவ பயணத்தை தொடங்கி வைத்த, இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான், நாளையும் முதல்வர். அவர் மகத்தான வெற்றியை பெற்று திமுக தனிபெருன்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். நாங்களும் பின்பற்ற துடிப்பது தமிழக முதல்வரை தான். இயக்கத்தை எழுத்தால், ஆற்றலால் பாதுகாத்த கலைஞர் 3 முறை ராஜசபைக்கு அனுப்பினார். காலச் சூழல் என்னை மாற்றி இருக்கலாம்.
திராவிட இயக்கம் எனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்தது. திராவிட இயக்க கோட்டையை அடியோடு ஒழித்து விடுவோம், துடைத்து எறிவோம் என, நாலந்தார மனிதனாக பேசும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு என்ன கொழுப்பு, ஆணவம் இருந்தால் 75 ஆண்டு இயக்கத்தை துடைத்தெறிவோம் என பேசியிருப்பது திமிறு பேச்சு. திமுக-வை தோற்கடிப்போம் என, பேசுங்கள். அது ஜனநாயகம். இந்திய நெருக்கடி காலத்தில் கூட அப்படி யாரும் பேசவில்லை. மோடி பிரதமராக இருக்கும் தைரியத்தில் நீங்கள் பேசுகிறீர்களா. தமிழகத்தில் நுழைந்து விடுவோம் என நினைக்கிறீர்கள்.
திமுகவுக்கு ஆபத்து சூழல் படையெடுத்து வருவதால் திமுகவில் கூட்டணி சேர்ந்தோம். நாங்கள் பலத்தில் குறைவாக இருக்கலாம். போர் படையாக இருப்போம். எங்கள் பலம், சக்தி திராவிட இயக்கத்தை பாதுகாக்கும். அதற்காக திமுகவுக்கு தோல் கொடுப்போம். நான் பதறுகிறேன் என, ஒரு பத்தரிகை சொல்கிறது.
நாங்கள் சேர்ந்து போகவில்லை. உயிர் இருக்கும் வரை குரல் ஓயாது. இயற்கை எனக்கு கொடுத்த வரம். அந்த உணர்வோடு திமுகவில் இருக்கிறோம். என் மீது ஏவப்படாத பழி உண்டா. என் வாழ்நாள் தமிழகத்தின் ஜீவாதாரங்களை காப்பாற்ற பயன்பட்டு இருக்கிறது. சாதி, மதத்தால் மோத வேண்டாம். சகோதாரர்களாக வாழ்வோம். ஒரு கூட்டம் மத வெறியோடு உள்ளது. அவர்களை அகற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், திருமுருகன் காந்தி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மார்நாடு, பூமிநாதன் எம்எல்ஏ, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.