தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை: மாநில தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை: மாநில தேர்தல் அதிகாரி விளக்கம்
Updated on
1 min read

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்று மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் குறிப்பிட்ட அளவிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக செய்திகள் வந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நயாக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த அக்.27-ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர்.

பிஎல்ஓக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஏக்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத படிவங்களின் பட்டியல், தொடர்புடைய பிஎல்ஏக்களுக்கு வழக்கமான அடிப்படையில் பகிரப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்தப் பட்டியல் டிச.11-ம் தேதி எஸ்ஐஆர் படிவம் பெறும் காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்து, டிச.16-ம் தேதி வெளியிடப்படும்.

எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல், விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முழுமையான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் டிச.16 முதல் ஜன.15-ம் தேதி வரை ஆகும். இந்தக் காலப்பகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை: மாநில தேர்தல் அதிகாரி விளக்கம்
200 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் மிகுந்த அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in