

கரூர்: கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் மீது மினி வேன் ஏற்றி கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த குப்பம் அருகேயுள்ள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (55). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு கல் குவாரிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தார். இதைத் தொடர்ந்து 2022, செப்.9-ம் தேதி குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
அதற்கு மறுநாள் செப்.10-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஓமலூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தான் ஓட்டிச் சென்ற மினி வேனை, ஜெகநாதனின் இருசக்கர வாகனத்தின் மீது ஏற்றியுள்ளார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளரான கரூர் ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த செல்வகுமார் தூண்டுதலின்பேரில், ஜெகநாதன் மீது சக்திவேல் மினிவேனை ஏற்றிக் கொலை செய்ததும், இதற்கு ராணிபேட்டையை அடுத்த ஆற்காட்டைச் சேர்ந்த வெல்டர் ரஞ்சித்குமார் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, செல்வகுமார், சக்திவேல், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளிகள் செல்வகுமார், சக்தி வேல், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா 2 ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும், ஆயுள் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.