

சென்னை: வீட்டு உபயோகத்துகான காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்கள் ஆகியும், நுகர்வோருக்கு டெலிவரி செய்யாமல் ஏஜென்சிகள் தாமதம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேல் போரினால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகிக்கப்படும் நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியை நகர்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களும், கிராமப் புறங்களுக்கு 45 நாட்கள் இடைவெளி என மத்திய அரசு அறிவித்தது. சமையல் காஸ் சிலிண்டர் போதுமான அளவு கையில் இருப்பதாகவும், தட்டுப்பாடு இன்றி காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சென்னையில் சில இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலங்களின் முன்பு காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் நிற்கின்றனர்.
வில்லிவாக்கம், வடபழனி உள்பட பல இடங்களில் காஸ் ஏஜென்சி அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். முன்பதிவு செய்ததற்கான குறுந்தகவல் செல்போன்களுக்கு வந்து 10 நாட்கள் ஆகியும், சிலிண்டர் விநியோகம் செய்ய வில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுவாக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து டெலிவரிக்கான அங்கீகார குறியீடு (டிஏசி) எண் ஒதுக்கீடு செய்த பின்னர் குறிப்பிட்ட நாட்களுக்குள் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், பலருக்கு டிஏசி எண் ஒதுக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படவில்லை.
இது குறித்து, சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் கூறியதாவது: நகர்புறங்களில் 25 நாட்களுக்கு பிறகு, காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். இதன்படி, முறையாக முன்பதிவு செய்து, 10 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை டிஏசி எண் வரவில்லை. இதன் பிறகு, எப்போது டெலிவரி செய்வார்கள் என்பதே தெரியவில்லை.
இதுதவிர, டிஏசி எண் வந்த வாடிக்கையாளர்களுக்கு எப்போது விநியோகம் செய்வார்கள் எனவும் தெரியவில்லை. ஏஜென்சியில் கேட்டால், உங்களுக்கு சிலிண்டர் ஒதுக்கிவிட்டோம். டெலிவரி செய்பவர்களிடம் கேளுங்கள் என்று கூறுகின்றனர். டெலிவரி செய்பவர்களிடம் கேட்டால் சிலிண்டர் வரவில்லை என்கின்றனர்.
சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு போன் போட்டாலும் எடுப்பதில்லை. நேரில் சென்று முறையிட்டாலும், சரியாக பதில் கூறுவது இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்காமல் ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், சிலிண்டர் இணைப்புகளும் அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில், பதற்றத்தில் சிலிண்டர் அதிக அளவு முன்பதிவு நடைபெறுவதால், ஏஜென்சியால் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
ஆயிரம் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய ஒரு ஏஜென்சியால், 5 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் வரை பதிவு செய்து, காத்திருக்கும் நிலை இருக்கிறது. இருப்பினும், முன்பதிவு செய்த தேதி அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சிலிண்டர் கிடைப்பதிலோ, விநியோகிப்பதிலோ பிரச்சினை இல்லை” என்றார்.