“விஜயகாந்த் குடும்பத்துக்கு கார் வாங்க தகுதியில்லையா?” - பிரேமலதா கேட்கிறார்

‘பேரம், பெட்டி’ என்று அவதூறு பேசுகிறார்கள்
பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

Updated on
1 min read

‘‘என் மீதும் எங்கள் கட்சி மீதும் ‘பேரம், பெட்டி' என அவதூறு பேசுகிறார்கள். விஜய்காந்த் குடும்பம் ஒரு காரை வாங்கக் கூட தகுதி இல்லையா?’’ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூறுகையில், "கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘திமுக ஒதுக்கும் அனைத்து இடங்களிலும் நாம் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். சீட் கிடைக்காதவர்கள் சோர்வடையாமல், 234 தொகுதிகளிலும் தேமுதிகவே போட்டியிடுவதாகக் கருதிப் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நமக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கும்’ என அறிவுறுத்தினார்” என்றனர்.

மேலும், ரிஷிவந்தியம் அல்லது விருத்தாச்சலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டும் என்றும், கடலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளைப் பெற்றால் வெற்றி எளிது என்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்குப் பதிலளித்த பிரேமலதா, “நமது கோரிக்கைகளை திமுகவிடம் முன்வைப்போம், அவர்கள் நல்ல தொகுதிகளை ஒதுக்குவார்கள்” என உறுதியளித்தார்” என்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்தோம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாளை ஐந்து பேர் கொண்ட குழு அறிவிக்கப்படும். அவர்கள் தொகுதிகளை இறுதி செய்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

விசுவாசமானவர்களுக்கே தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டணி வெற்றிக்காக மற்ற கட்சிகள் இடங்களை விட்டுத்தரும்போது நாங்களும் விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்.

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத தேமுதிக மீது, சமூக வலைதளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். அன்று விஜய்காந்த்தை அவமானப்படுத்தியது போல, இன்று என் மீதும் கட்சி மீதும் 'பேரம், பெட்டி' என அவதூறு பேசுகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன் வாங்கிய காரை இப்போது வாங்கியதாகச் சித்தரிக்கிறார்கள். விஜய்காந்த் குடும்பம் ஒரு காரை வாங்கக் கூட தகுதி இல்லையா? தான் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை மக்களுக்கே வாரி வழங்கியவர் விஜய்காந்த். அவருக்கு உறுதுணையாக நான் இருந்தேன் என்பது உலகிற்கே தெரியும். எங்களை 0.5% வாக்கு வங்கி கொண்ட கட்சி என விமர்சிப்பவர்கள், பிறகு ஏன் எங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும்? நானும் விஜய பிரபாகரனும் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>பிரேமலதா விஜயகாந்த்</p></div>
திமுகவில் வேட்பாளர் நேர்காணல் நிறைவு: ஏப்ரல் முதல் வாரத்தில் பட்டியல் வெளியீடு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in