

சென்னை: தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்ற தொடங்கிஉள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்ற தொடங்கினர்.
இதுதொடர்பாக, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன், சுந்தரேசன் ஆகியோர் கூறியதாவது: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை பலமுறை சந்தித்து பேசினோம்.
சுகாதாரத் துறை செயலர் முன்னிலையில் பல கூட்டங்கள் நடத்தி, எங்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறை அமைச்சகத்துடன் வரும் 19-ம் தேதி துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது.
அந்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கடந்த 2019-ம் ஆண்டு நடத்தியதைப் போல மீண்டும் ஒத்துழையாமை இயக்கம், 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்.
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம், இறுதியாக காலவரையற்ற பணி புறக்கணிப்பு என பல கட்ட போராட்டத்தை நடத்துவது என்று கூட்டமைப்பின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தற்போது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து அரசு மருத்துவர்கள் பணியாற்ற தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.