

மதுரை: ‘‘ஊழலை ஒழித்திட நிதி ஒதுக்கீடு செய்யாமல், இனி அரசு அலுவலகங்களில் எந்தப் பணியும் செய்யாதீர்கள்’’ என்று அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள், தங்களது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிய ‘வாட்ஸ் அப்’ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார், அனைத்து அரசு துறைகளிலும் சோதனை நடத்தி லஞ்சம் வாங்கியதாக அலுவலர்களையும் அதிகாரிகளையும் கைது செய்து வருகிறார்கள்.
இதே அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்யாமல் அன்றாடம் அரசு அலுவலக நிர்வாகங்களில் நடக்கும் பணிகளை மேற்கொள்ளச் செய்வதாகவும், இனி அதுபோன்று நிதி ஒதுக்கீடு இன்றி எந்தப் பணி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசு அலுவலர்கள் சங்கங்கள் முடிவு செய்து அவற்றை அறிவுரை குறிப்புகளாக, தங்களது அரசு அலுவலர்கள், அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்களில் அனுப்பிய பதிவுகள் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சமூக வலை தளங்களில் வைரலாகும் வாட்ஸ் அப் அறிவுரைகள் விவரம் வருமாறு: அரசு நிகழ்ச்சிகளுக்கு பயனாளிகளை அழைத்து வரச் சொல்கிறார்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குகிறோம்.
அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று ஆட்சியாளர்கள் கேட்டார்களா?. ஆளும் அரசும், நிர்வாகமும் இதுபோன்ற பணிகளை செய்ய நிர்பந்தம் செய்து நம்மை லஞ்சம், ஊழலுக்கு தள்ளுகிறது. இனி பயனாளிகளை அழைத்து வருவோம். அமர வைப்போம்.
அதோடு நமது பணி முடிந்துவிட்டது. யாரும் எந்தப் பணிக்கும் அரசு நிதி ஒதுக்கீடு இல்லாமல், தன் கையில் இருந்து பணம் செலவு செய்யாதீர்கள். அப்படி செலவு செய்ய எங்கிருந்தாவது நெருக்கடி வந்தால், சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வாருங்கள். மிக கவனமாக பணி செய்யுங்கள்.
நிர்வாகத்திடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என முந்திரிக் கொட்டையாகச் செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்போது அந்த நிர்வாகம் உங்களை காப்பாற்ற வராது.
வட்ட அலுவலகங்களில் அரசு இணைய சேவையை மட்டும் பயன்படுத்துங்கள். வேகமாக பணி முடிக்க கூடுதல் இணையதள இணைப்பை சொந்த செலவில் பெறாதீர்கள். வீட்டுமனைப் பட்டா கோப்புகளை தயார் செய்ய ஆகும் செலவினத்தை அரசு வழங்கிய பிறகு செய்யுங்கள். நீங்கள் உங்கள் பணத்தில் செலவு செய்யாதீர்கள்.
‘அமைச்சர் வருகிறார், உடனடியாக அதனை வாங்கி வா, இதனை வாங்கி வா, என்றால்..? இதற்கு எல்லாம் அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. என்னிடம் பணம் இல்லை எனச் சொல்ல பழகிக் கொள்ளுங்கள். சிறப்பு விருந்தினர் வருகைப் பணி பார்க்க சொன்னால், வெறும் கையோடு செல்லுங்கள். எதுவும் செலவு செய்யாதீர்கள்.
அதுபோல், நீதிமன்ற வழக்குகளுக்கு எந்தச் செலவும் செய்யாதீர்கள். அரசு ஒதுக்கீடு செய்தால் வழக்குக்கு செலவு செய்யுங்கள். அரசு விழாக்களுக்கு அரசு என்ன நிதி ஒதுக்கீடு தருகிறதோ, அதற்கான பணியை மட்டும் செய்யுங்கள். கூடுதலாக செலவு செய்யாதீர்கள்.
அலுவலகப் பாதுகாப்புக்கு இரவு காவலாளி, கழிவறைகளை சுத்தம் செய்ய, அலுவலகத்தை அன்றாடம் கூட்டி சுத்தம் செய்ய ஆட்களை அரசு நிதி ஒதுக்கீடு இல்லாமல் பணி அமர்த்தாதீர்கள்.
எந்தப் பணியாக இருந்தாலும் அந்தப் பணியை மேற்கொள்ள எங்கிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அங்கிருந்து அந்தப் பணிக்கான அரசின் நிதி ஒதுக்கீடு வந்தால் மட்டும் அப்பணியை செய்யுங்கள்.
அரசின் நிதி இல்லை என் றால், அந்தப் பணியைச் செய்ய முடியாது என திரும்பிச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். ஊழலை ஒழிக்க இதுபோன்ற நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், நம்மை ஊழல் செய்ததாக மாட்டிவிட்டு அரசியல் வாதிகளும், உயர் அதிகாரிகளும் தப்பித்துக் கொள்வார்கள். இங்கு நம்மை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.