

மதுரை: செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பி நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (எம்பிஏ) சட்ட எழுத்தறிவு மன்றம் சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித ஆற்றல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியது: தொழில்நுட்பம் என்பது அடித்தளமாக இருக்காது. தொழில்நுட்பம் கூரை போன்றது. அடித்தளத்தை மனிதன்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தனித்திறமையின் மீது அவன் நம்பிக்கை கொண்டு எதையும் செயல்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மனிதன் அதை தனது வேலையாள் போலத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதை முழுமையாக நம்பி அதன் முடிவெடுக்கெல்லாம் மனிதன் தலையாட்டினால் அது முதலாளியாக மாறிவிடும். செயற்கை நுண்ணறிவை முழுமையாக சார்ந்து படைப்புகள் உருவாக்குவதும், நீதிமன்றங்களில் அதனை சார்ந்து மட்டுமே விசாரணைகளில் பற்கேற்பதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளும் என்று நினைத்து, நம்முடன் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் அதனுடன் ஒப்படைத்தால் வெற்றிகரமான இலக்கை அடைய எந்த வகையிலும் உதவாது.
இந்த உலகம் என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் சுழல்கிறது. குறைந்த உழைப்பில் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இப்போது அதிகமாகி உள்ளது. அதற்கு அவன் தேர்ந்தெடுக்கக்கூடிய வழிதான் இந்த செயற்கை நுண்ணறிவு.
புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்கள் அறிவை விரிவு செய்யும். ஒரு மனிதன் புத்தகத்தை எந்தவித இடர்பாடும் இல்லாமல் கவனச் சிதறலும் இல்லாமல் வாசிக்கும்பொழுது அவன் பெரிய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். இதனால் பெரிதாகும் சிந்தனையில் உருவாகக் கூடிய அனைத்து செயல்களும் காலத்துக்கும் இருக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எம்பிஏ தலைவர் மூத்த வழக்கறிஞர் அருள்வடிவேல்சேகர் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர்கள் கு.சாமிதுரை, பி.சரவணன், ஆர்.காந்தி, மீனாட்சி சுந்தரம், திலீப் குமார், ஹென்றி டிபேன், சாமுண்டி போஸ் உள்ளிட்டோர் பங்கற்றனர். மீனாட்சி தொகுத்து வழங்கினார். டி.எஸ்.முகமது முகைதீன் நன்றி கூறினார்.