“வளர்ச்சித் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள்” - தவெக அரசுக்கு டிஆர்பி ராஜா அறிவுரை

“வளர்ச்சித் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள்” - தவெக அரசுக்கு டிஆர்பி ராஜா அறிவுரை
Updated on
1 min read

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் மற்றும் உலகளாவிய விளையாட்டு நகரம் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ‘தயவு செய்து வளர்ச்சித் திட்டங்களை அரசியலாக்காதீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த வாரத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு எதிர்காலம் குறித்த ஒரு செய்தியை உணர்த்துகின்றன.

பரந்தூர் விமான நிலையம்: ஒப்புதல்கள் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் புதிய இடத்தைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய விளையாட்டு நகரம் (Global Sports City): அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்க தயாராக இருந்த நிலையில், இப்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசுகளுக்கு முழு உரிமை உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மீண்டும் புதிதாகத் தொடங்குவது என்பது எவ்விதச் செலவும் இல்லாத ஒன்றல்ல. ஒவ்வொரு முறை திட்டத்தை மாற்றியமைப்பதால் கால விரயம், ஒப்பந்தச் சிக்கல்கள், செலவு அதிகரிப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளில் தாமதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

தேவைக்கு முன்பே திட்டமிட்டு, விரைவாகச் செயல்படுத்தக் கற்றுக்கொண்டதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் உற்பத்தித் துறையின் மையமாகத் திகழ்கிறது.

பெரிய கனவுகளைக் காண்பதும், திட்டங்களை மேம்படுத்துவதும், பிரம்மாண்டமாக உருவாக்குவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்கத் தொடங்கும் நிலையைத் தமிழ்நாட்டால் தாங்கிக்கொள்ள முடியாது. தயவுசெய்து வளர்ச்சித் திட்டங்களை அரசியலாக்காதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

“வளர்ச்சித் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள்” - தவெக அரசுக்கு டிஆர்பி ராஜா அறிவுரை
பெரியார், அம்பேத்கருக்கு விஜய் அரசால் மிகப் பெரிய அவமரியாதை: திமுக காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in