

சென்னை: ‘தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அரசு விவகாரங்களில் தலையிடாமல், மக்கள் சேவையை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்’ என்று கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் ஒரு சிறந்த மக்களாட்சி அமைந்துள்ள சூழலில், கட்சியினரின் பொறுப்புணர்வு பலமடங்கு அதிகரித்துள்ளது. தவெக தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே மக்கள் சேவைதான். எனவே, அந்தப் பணியில் எவ்வித மாற்றமுமின்றி தவெகவினர் ஈடுபட வேண்டும்.
தவெக நிர்வாகிகள் தங்களுடைய எல்லை என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கட்சிக்கும், தலைவர் விஜய்யின் நற்பெயருக்கும் சிறு களங்கமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது ஒவ்வொரு தொண்டனின் தலையாயக் கடமையாகும். தவெகவினர் மக்கள் நலப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மாறாக, அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதோ, மக்கள் பிரதிநிதிகளின் பணிகளில் ஆய்வுகள் மேற்கொள்வதோ அறவே கூடாது. இந்த உத்தரவு தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு வழங்கப்படுகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தென்காசி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தவெக நிர்வாகிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். இது அரசு நிர்வாக ரீதியாகவும், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்தே, கட்சி நிர்வாகிகளுக்கு இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை தவெக தலைமை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.