

சென்னை: “தமிழக முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி, ஆளுநர் அர்லேகருக்கு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆளுநருக்கு திமுக சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், “கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதல்வர் ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் முதல்வரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரையும் குதிரை பேரம் மூலமாக பதவி விலக செய்து, தவெகவில் இணைத்துள்ளார்” என்று திமுக அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “எங்களது 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது.” என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.