

சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பெண்கள் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகில் நேற்று காலை நடைபெற்ற பொங்கல் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் பங்கேற்றார். அதன்பின், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் 3,725 மாணவ, மாணவியருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து புளியந்தோப்பு டான்பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், 1300 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியதுடன், அவர்களுக்கு உணவு பரிமாறினார்.
முன்னதாக, பெரம்பூரில் கட்சியினர் பங்கேற்ற பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியுடன் தான் நான் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது, என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், திமுகவினர் இதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழா. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளில் 50 சதவீதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீதம் தான் மீதம் இருக்கிறது.
இன்று பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். ஏன், பாஜகவினர் கூட, திமுக-காரர்கள் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று சொல்கின்றனர்.
கடந்த 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அன்று முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களிடம் “திமுக-காரன் ஒரு சிங்கிள் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது” என்று வெளிப்படையாகவே சொன்னார்.
அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகள், ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுகவைச் சார்ந்தவர்கள் நம்முடைய செயல் வீரர்கள் ஆற்றும் அந்தப் பணிகளையெல்லாம் பார்க்கும் போது 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம்.
நம்முடைய கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால், நாம் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.
இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம், சபதம் எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.