

படம்: ஜெ.மனோகரன்
கோவை: “அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை; அமைச்சரவையில் பங்கு வேண்டும் என அழுத்தமும் தரவில்லை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் இன்று (ஜன.10) சுவாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: ‘‘இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அப்பொழுது பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. மத மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரை படையெடுப்பு நடந்தது.
சோமநாதபுரம் ஆலயத்தில் கஜினி முகமது 17 முறை படை எடுத்தார். செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். ஆலயங்களும் சேதப்படுத்தப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கோயில் புனரமைக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகிறது. இந்த 75-வது ஆண்டு விழாவில் தமிழகம் முழுவதும் 150 சிவாலயங்களில் சாந்தி பூஜை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எல்லா சிவாலயங்களிலும் சாந்தி பூஜை நடைபெறுகிறது. இதனடிப்படையில் சிவாலயத்தில் இன்று நாங்கள் வழிபாடு செய்திருக்கிறோம். இந்த வழிபாட்டின்போது, என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் என வேண்டியுள்ளோம்’’ என்றார்.
பின்னர், ‘கூட்டணி ஆட்சி அமையுமா?, பாஜகவில் இருந்து வெற்றி பெற்றால் அமைச்சர்கள் ஆவார்களா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ‘‘தேசிய ஜனநாயக ஆட்சி, கூட்டணிக் கட்சியின் ஆட்சி அமையும். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி. அமைச்சர்கள் யார் என்பது தேர்தல் முடிந்து முடிவு செய்யலாம்.
பாஜகவில் இருந்து வெற்றி பெற்றால் அமைச்சர்கள் ஆவார்களா என்பதை அப்புறம் பார்க்கலாம். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இதுவரை கொடுக்கவில்லை. எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்தவுடன் சொல்கின்றோம்.
இரட்டை எண்ணிக்கையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள். தேமுதிக இப்பொழுது கூட்டணி முடிவை சொல்லவில்லை. அவர்களுடன் கூட்டணி தொடர்பாகவும் பேசவில்லை. ஒவ்வொருவராக என்டிஏ கூட்டணிக்கு வர ஆரம்பித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.
தொடர்ந்து பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் வந்திருப்பதால், ஐம்பது சதவீதம் மட்டும் தானே கூட்டணிக்கு வந்திருக்கிறது என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‘‘அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். அது 50 சதவீதம் மட்டும்தான் என சொல்ல முடியாது” என்றார்.
ஐடி, ஈடி வரிசையில் சென்சார் போர்டையும் பயன்படுத்துகிறது என முதல்வர் விமர்சித்துள்ளார். ‘பராசக்தி’ படம் ரிலீஸ் ஆனது முதல்வருக்கு தெரியாதா? இந்த படத்தை எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது? சென்சார் போர்டு அவர்கள் விதிப்படி செயல்படுகின்றனர். அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை’’ என்றார்.