

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, கொமதேக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர தேமுதிகவுக்கு 10, கொமதேக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தவாக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தேமுதிகவை காரணம் காட்டி கூடுதல் தொகுதி கேட்டு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும், தனிச்சின்னம் கேட்டு மதிமுகவும் முறுக்கிக் கொண்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
இதையடுத்து அதிருப்தி அடைந்த திமுக தலைமை, தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டுமென மூத்த அமைச்சர்கள் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கூட்டணி கட்சிகளின் மூத்த நிர்வாகிகளிடமும் நேரடியாக பேசி சுமூக நிலையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பலனாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் குழு நடத்திய மறைமுக பேச்சுவார்த்தையை, தொடர்ந்து இந்திய கம்யூ. 6 தொகுதிக்கும், விசிக 8 தொகுதிக்கும் ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மதிமுக, மார்க்சிஸ்ட் மட்டும் இன்னும் இறங்கி வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த கட்சிகளுடன் திமுக பேசி வருகிறது.
இதில் மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு தலா 4 தொகுதிகளும் ஒதுக்குவதற்கு திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் அந்த கட்சிக்கு இடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், திமுக நேரடியாக 160 தொகுதிகளுக்கு குறையாமலும், உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்கள் வரையும் களமிறங்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அனைத்து தோழமை கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டை துரிதமாக முடித்து நாளைக்குள்( மார்ச் 11) ஒப்பந்தமிட முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. அதற்கு முக்கியத்துவம் கிடைக்காதவாறு, அன்றைய தினமே கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை தொடர்ந்து முடித்து அறிவிப்புகளை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 188 இடங்களிலும் போட்டியிட்டது. இம்முறை கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளதால் அதைவிட 10 முதல் 15 தொகுதிகள் வரை குறைவாக போட்டியிட வேண்டிய நிலையில் திமுக உள்ளது.