

சென்னை/ புதுடெல்லி: நிபந்தனைகளைப் பாஜக அரசு ஏற்றுக் கொண்டதால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகவும் 3 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து வர உள்ளது. அதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்று இந்தியாவிலேயே முதல்முதலாக எச்சரித்தது நாம்தான். கடந்த ஏப்ரல் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஒரு மர்ம மசோதாவை கொண்டு வந்தார்கள். படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாகக் கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
பாஜகவுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம் விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது, அதில் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என ‘நடைமுறைக்கு ஏற்ற’ தீர்வை 2024-ம் ஆண்டே சட்டப்பேரவைத் தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.
நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த 2 முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய 3 ஆண்டு கால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது. தமிழகத்தின் நலன் பறிபோக கூடாது. அதில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். கடந்த 1967-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது 42-ஆக இருந்த தமிழகத்தின் மக்களவை தொகுதிகளை 39-ஆக குறைத்தார்கள். தற்போது நம்முடைய பர்சென்டேஜில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம்.
நாடாளுமன்ற கூட்ட தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். மசோதாவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் விவரங்களைத் தெரிவிக்க, டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்துக்கு திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், வில்சன் ஆகியோர் சென்றனர். அங்கு அமித் ஷாவைச் சந்தித்து திமுக.வின் முடிவைத் தெரிவித்தனர்.
கனிமொழி விளக்கம்
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி திமுக எம்.பி.க்கள் 5 பேர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து திமுகவின் ஆதரவு குறித்து தெரிவித்தோம்.
தொகுதி மறுவரையறையால் வரக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேசாத கால கட்டத்திலேயே, ‘இருக்கக் கூடிய எண்ணிக்கையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி உயர்த்தினால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொண்டுவர வேண்டும். தமிழகம் பாதிக்கப்பட கூடாது’ என முதல்முதலாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுகதான்.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு கட்சி தலைவர்களையும், 5 முதல்வர்களையும் அழைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடத்தினார். அதிலும் மிக தெளிவாக தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறைதான் வேண்டும் என்றார். ஆனால், கடந்த முறை 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், 50 சதவீதம் உயர்வுக்கான தகவல்கள் மசோதாவில் இடம்பெறவில்லை. இதனால் தமிழக மக்களவையின் எண்ணிக்கை 39-ல் இருந்து 32 ஆக குறைந்திருக்கும்.
அப்போது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தோம். இப்போது, திமுக வைத்த கருத்துகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 சதவீதம் எண்ணிக்கையை உயர்த்தி தருகிறோம் என்கிற மசோதாவை கொண்டு வருகின்றனர்.
இதன்மூலம் 59 எம்.பி.க்கள் தமிழகத்துக்கு கிடைப்பார்கள். இவ்வாறு அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பெற்று தந்திருக்க கூடிய மகிழ்ச்சி யோடு இந்த மசோதாவை திமுக ஆதரித்திருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இவ்விகாரத்தில் ‘கோழைகள்’ என்று யாரை பற்றி பேசுகிறார் என தெரியவில்லை. திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.