

ராம்குமார்
மதுரை: ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் திமுக பகுதி செயலாளர், சார் பதிவாளர் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஸ்ரீரங்கம், வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது கோயில் இணை ஆணையர் போலீஸில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார், சார் பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். ராம்குமார் மனுவில், நான் வாங்கிய நிலம் கோயிலுக்கு சொந்தமானது அல்ல. முறையாக அந்த நிலத்தை வாங்கியுள்ளேன். அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.
வனிதா தனது மனுவில், நிலப் பதிவுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததால் நிலத்தை பதிவு செய்தேன். நிலப் பதிவுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்து, வழக்கின் தற்போதைய நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.