

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த தன்னை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க 5 கோடி ரூபாய் தரும்படி வலியுறுத்தியதாகவும், வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதியளித்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பி கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சி.விஜயபாஸ்கர், ஆளும் தவெகவில் இணைந்துள்ள நிலையில், பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், மனுதாரர் புகார் குறித்து புதுக்கோட்டை டிஎஸ்பி நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிய வந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.