

புதுக்கோட்டை: நிர்வாக வசதிக்காக தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 4 பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை தவெக அரசு தற்போது செயல்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் 70 ஆயிரம் கிமீ தொலைவுக்கு சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த துறையானது, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம், திட்டங்கள், பெருநகரங்கள், தரக்கட்டுப்பாடு என 5 பிரிவுகளாக இயங்கியது. சாலைகள் மற்றும் பாலங்களை அமைத்தல், சாலையின் தரத்தை ஆய்வு செய்தல் போன்றவை இப்பிரிவுகளின் பிரதான பணிகளாக இருந்து வந்தன.
இதில், தரக்கட்டுப்பாடு தவிர மற்ற 4 பிரிவுகளுக்கான தலைமை அலுவலகங்கள் சென்னையில் தனித்தனியே செயல்பட்டு வந்தன. இந்த 4 பிரிவுகளிடையே நிர்வாகச் சிக்கல், எல்லைப் பிரச்சினை, நிதி ஒதுக்கீடு, பணிச்சுமை ஆகியவற்றால் சமநிலையற்ற சூழல் ஏற்பட்டது. மேலும், பணிகளிலும் தேக்க நிலை ஏற்பட்டது. இதனால், துறையை மேம்படுத்தும் வகையில், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம், திட்டங்கள், பெருநகரங்கள் ஆகிய 3 பிரிவுகள் கலைக்கப்பட்டு கட்டுமானம், பராமரிப்பு பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. தற்போது, இத்திட்டத்துக்கு தவெக அரசும் அனுமதி அளித்துள்ளதால், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், சாலை எல்லை பிரித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கூறியதாவது: தரக்கட்டுப்பாடு தவிர மற்ற 4 பிரிவுகளும் ஒரே குடையின் கீழ் தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு எனும் பெயரில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 புதிய மண்டல அலுவலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதிட்டம் என்றாலும், மக்கள் நலன் கருதி அதை இந்த அரசும் அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது. இவ்வாறு கூறினர்.