ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது: முதல்வர் கருத்தை வெளிப்படுத்தினார் ஐ.பெரியசாமி

காங். தலைவர்கள் கோரிக்கை நிராகரிப்பு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது: முதல்வர் கருத்தை வெளிப்படுத்தினார் ஐ.பெரியசாமி
Updated on
2 min read

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி இல்லை, அதிகாரத்தில் பங்கு கிடையாது என்று திமுக துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சுதா போன்றோர் ஆட்சியில் பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு குழுவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரி வருகிறார். இது திமுக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும், எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை மேலும் மேலும் கோபப்படுத்தும் வகையில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி வெளியாகி உள்ள பராசக்தி படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் ‘பராசக்தி படத்தை தோல்விப் படம் என்று நண்பர்கள் சொன்னார்கள். நாம் ஏன் உழைச்ச காசை வீணாக்கணும் என்று நான் இந்தப் படத்தை பார்க்கவில்லை’ என்று நேற்று பதிவு போட்டிருந்தார். இதற்காக, சமூக வலைதளங்களில் மாணிக்கம் தாகூரை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும் மத்திய அரசை எதிர்த்தும் காங்கிரஸ் குரல் கொடுத்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட போதிலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் தவெகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? என்றும் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் ஆட்சியில் பங்கு கிடையாது என்று திமுக அறிவித்துள்ளது. திமுக துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி இதைத் தொிவித்துள்ளார். மேலும், கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதல்வரின் எண்ணத்தை ஐ.பெரியசாமி வெளிப்படுத்தி இருப்பதோடு, ஆட்சியில் பங்கு கிடையாது என்ற உறுதியான செய்தியை காங்கிரஸுக்கு திமுக தலைமை அறிவித்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி மேட்டுப்பட்டி பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணிக் கட்சிகளின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்போதும் கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சிதான் இருந்திருக்கிறது. இனியும் கூட்டணி ஆட்சி இருக்காது. கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கோருவது அவர்களின் விருப்பம். மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் குறித்து முதல்வர் வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைதான்’ என்றார்.

மகளிருக்கு தித்திப்பான செய்தி: முன்னதாக, அமைச்சர் சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், ‘பொங்கல் கொண்டாடும் நேரத்தில் மகளிருக்கான தித்திப்பான செய்தி வரும் என தெரிவித்துக் கொள்கிறேன். அதை முதல்வர்தான் அறிவிப்பார். எல்லோருக்கும் எல்லா திட்டங்களையும் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது’ என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது: முதல்வர் கருத்தை வெளிப்படுத்தினார் ஐ.பெரியசாமி
“அமித் ஷாவிடம் பழனிசாமி சரண்டர்” - எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in