

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தனித்து ஆட்சி என்று அறிவித்த பழனிசாமி, இரண்டே நாளில் டெல்லி சென்று அமித்ஷாவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமைக் கட்சியாக பழனிசாமி அடமானம் வைத்துள்ளார். தனித்து ஆட்சி என்று அறிவித்த பழனிசாமி, இரண்டே நாளில் டெல்லி சென்று அமித்ஷாவிடம் சரண்டர் ஆகி விட்டார். அதிமுகவை தேடி பாஜக வந்து கூட்டணி பேசிய நிலை மாறி, பாஜகவை தேடி அதிமுக சென்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலை உள்ளது. திமுக கூட்டணி வலிமையாக உள்ளது.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
அரசியல் ரீதியில் தங்களுக்கு எதிரானவர்களை மிரட்ட சிபிஐ, இ.டி. ஆகியவற்றை மத்திய அரசு பயன்படுத்துவது வழக்கம். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் திரைப்பட தணிக்கை வாரியம், மத்திய அரசின் ஆயுதங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
தற்போது தனியார் ஆம்னி பேருந்துகளை விட, அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பேருந்துகள் இல்லாத ஊர்களுக்கு வேண்டுமானால், ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருந்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 20 டபுள் டெக்கர் (மாடி) பேருந்துகள் வாங்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் விட்டுள்ளது. அது முடிந்தவுடன் முதற்கட்டமாக சென்னையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.