

“திமுக ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும்” என்று திமுக எம்பி-யான ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நேற்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெத்ரட்சகன் எம்.பி., கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-வினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் புதுச்சேரி நிலவரத்தை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார். திமுக-வை இங்கேயும் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளையும் எங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்.
புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி நூற்றுக்கு இருநூறு சதவீதம் அமையும். ஆனால் அந்த ஆட்சி திமுக தலைமையில் இருக்குமா என்பதை எங்கள் தலைவர் முடிவெடுப்பார். நான் புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் இல்லை. என்னை இங்கு கட்சி வேலைக்காக மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறது தலைமை. நான் என்னுடைய பணியைச் செய்கிறேன். அவ்வளவே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் தனது புதுச்சேரி பிரச்சாரத்தின் போது “திமுக நம்ப வைத்து ஏமாற்றும்” என்று பேசியது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். 16 சதவீத வளர்ச்சியை திமுக தலைவர் நிரூபித்து காட்டியுள்ளார்.
இதை மத்திய அரசே தெரிவித்துள்ளது. இந்த ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும். எங்களுக்கு ஆக்கபூர்வமாகப் பேசித்தான் பழக்கம். வெறுமனே அரசியல் பேசுவது வீண். விஜய் வெற்று அரசியல் பேசுகிறார்” என்று சொன்னார்.