பிஹார் முடிவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா? - புள்ளி விவரத்துடன் பேசும் ராஜிவ் காந்தி நேர்காணல்

பிஹார் முடிவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா? - புள்ளி விவரத்துடன் பேசும் ராஜிவ் காந்தி நேர்காணல்

Published on
Summary

திமுக-வின் முக்கிய முகமாக இருப்பவர் அக்கட்சியின் மாணவரணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ் காந்தி. சேனல் விவாதங்களில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் திமுக-வின் கொள்கை மறவராக கொடிநாட்டி வரும் அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசியதிலிருந்து...

Q

பிஹார் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்கிறார்களே..?

A

பிஹாரில் 100% வாக்குப்பதிவு நடக்காததற்கு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் பெயர்கள் இருப்பதே காரணம் என்றார்கள். பல்வேறு குளறுபடிகளுக்கு இடையில் எஸ்ஐஆரில் 70 லட்சம் வாக்காளர்களை நீக்கினார்கள். அதன்பிறகும் 69% வாக்குகள் தான் பதிவானது.

Q

அப்படியெனில், யாரின் வாக்கை நீக்கினார்கள்?

A

உண்மையில், இறந்தவர்களின் வாக்கையோ, இரட்டைப் பதிவு கொண்டவர்களின் வாக்கையோ அவர்கள் நீக்கவில்லை. மாறாக, தங்களுக்கு எதிரான வாக்குகளை திட்டமிட்டு நீக்கினார்கள். களத்தில் சம வாய்ப்பு அளிக்காமல், எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்புக் கொடுக்காமல், தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி, இந்த வெற்றியை பெற்றுள்ளனர். இதைப் பார்த்து நாங்கள் தமிழகத்தில் பயப்படும் நிலையில் இல்லை. ஆனால், எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டிய தேவையுள்ளது.

Q

எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக எதிர்த்து வந்த திமுக தற்போது ஊரோடு ஒத்துப்போக ஆரம்பித்துவிட்டதோ?

A

எஸ்ஐஆரை முதலில் எதிர்த்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டரீதியாக போராடி வருகிறோம். அதே சமயம், களத்தில் எங்கள் பாகமுகவர்கள் மூலமாக, யாருடைய வாக்கும் பறிபோய்விடக்கூடாது என்பதற்காக பணியாற்றி வருகிறோம். ஒரு அரசியல் கட்சியாக எங்கள் எதிர்ப்பை காட்டுவதும், ஒரு அரசாக சட்டப்பூர்வ கடமையைச் செய்வதும் வேறு வேறு.

Q

தவெக, நாதக-வுக்கு திரள்வது போல் இப்போது திமுக-வுக்கு இளைஞர் கூட்டம் வருவதில்லையே... எங்கே தவறியதாக நினைக்கிறீர்கள்?

A

திமுக தவறவிடவில்லை. தமிழகத்தில் உள்ள 2,200 உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் எங்கள் மாணவரணி அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். ‘இல்லந்தோறும் மாணவரணி’ எனும் முன்னெடுப்பு மூலம் 6 லட்சம் மாணவர்களை திமுக-வில் சேர்த்துள்ளோம். கல்லூரிகளில் மட்டும் 3.6 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

எங்கள் கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களுக்குப் பின்னால் இளைஞரணி, மாணவரணி அணிவகுத்து நிற்கும். ஆனால், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களுக்கு அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இல்லாததால், இளைஞர்களே முகமாகத் தெரிகிறார்கள். இது ஒரு தோற்றப் பிழை மட்டுமே. அது ஒருபோதும் தேர்தல் களத்தில் எடுபடாது. அமைப்பு ரீதியாக நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம்.

Q

இன்றைய ‘2 கே கிட்ஸ்’ இளைஞர்களை அரசியல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

A

அதில் சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. இன்றைய தலைமுறையினர் சினிமாவின் தாக்கத்தில் அதிகம் உள்ளனர். யதார்த்தமான பேச்சை, கதைகளை கேட்க அவர்கள் தயாராக இல்லை. ஒரு கதையைச் சொன்னால், அதற்கு ஒரு பின்னணி இசை, ஹீரோயிசம் போன்ற விஷயங்கள் இருந்தால்தான் நம்புகிறார்கள். அது ஒரு மாய பிம்பம். இதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை தொடர்ந்து பேசித்தான் புரியவைக்க வேண்டும்.

Q

தமிழகத்திலும் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதில் உங்கள் கருத்து என்ன?

A

மாணவர் பேரவைத் தேர்தலை வரவேற்கிறோம். ஆனால், முந்தைய காலகட்டத்தில் எங்கள் முன்னோர்கள் படிக்காததால், எங்களுக்கான அரசியலை நாங்களே பேச வேண்டிய தேவை இருந்தது. அதனால் மாணவர்கள் அரசியலுக்குள் வந்தார்கள். இன்று, மாணவர்களுக்காக போராட வலுவான அமைப்புகள் இருக்கின்றன. எனவே, மாணவர்களுக்கு முதலில் படிப்பு, அடுத்ததுதான் அரசியல் என்பதில் தெளிவாக இருக்கிறோம். கல்லூரி வளாகத்துக்குள் கட்சி அரசியல் வேண்டாம். மாணவர்களின் கல்விச் சூழலைப் பாதிக்காத வகையில் எடுக்கப்படும் முடிவுகளை நாங்கள் ஆதரிப்போம்.

Q

திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதற்கான வலுவான காரணமாக எதைச் சொல்வீர்கள்?

A

தமிழகம் இன்று கல்வி, மகளிர் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் தத்துவ முகமாக எங்கள் தலைவர் உயர்ந்திருக்கிறார். வட இந்தியா முழுக்க வெறுப்பு அரசியல் பரப்பப்படும்போது, ‘நாம் எல்லோரும் ஒன்று’ எனும் ஒற்றுமை அரசியலை எங்கள் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அந்த சகோதரத்துவம், சமூக நீதிக்காகவே திமுக ஆட்சி மீண்டும் அமையும்.

Q

கோயம்புத்தூரில் இம்முறை தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

A

கடந்த முறை கோவையில் 10 தொகுதிகளையும் இழந்தோம். ஆனாலும், கோவைக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். அதனால் இம்முறை, அதிமுக கோட்டையான மேற்கு மண்டலம் திமுக-வின் வசமாகும். கோவையில் இம்முறை பத்துக்குப் பத்து தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம்.

பிஹார் முடிவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா? - புள்ளி விவரத்துடன் பேசும் ராஜிவ் காந்தி நேர்காணல்
“விஜய்யால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசிக்கும்!” - மமக தலைவர் ஜவாஹிருல்லா நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in