“விஜய்யால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசிக்கும்!” - மமக தலைவர் ஜவாஹிருல்லா நேர்காணல்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதை எதிர்த்து அந்தக் கட்சி தாக்கல் செய்திருக்கும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மமக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
திமுக கூட்டணியில் இருக்கும் நீங்கள் மமக-வின் தனித்த அடையாளத்தை எப்படி கட்டிக்காக்கிறீர்கள்?
கூட்டணியில் இருந்தாலும் கட்சி சார்பில் 2 எம்எல்ஏ-க்களோடு தனித்த அடையாளத்துடன் தான் இருக்கிறோம். மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளிலும், சில நேரங்களில் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையிலும் எங்களுடைய பங்களிப்பைச் செய்து வருகிறோம்.
சிஏஏ, வக்ஃபு திருத்தச் சட்டம் போன்ற பிரச்சினைகளில் திமுக-வின் அணுகுமுறை உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?
நிச்சயமாக. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து முதல்வர் தனது தலைமையிலேயே சென்னையில் ஒரு பெரியபேரணியை நடத்தினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரை வெறும் ‘வாக்கு வங்கி’யாக மட்டுமே பார்ப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
சிறுபான்மை மக்கள் வெறுமனே தங்களுடைய நலனுக்காக மட்டும் இல்லாமல், நாட்டைப் பொதுவாக பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில், நாட்டின் நலனுக்கும் மாநிலத்தின் நலனுக்கும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பகுப்பாய்வு செய்து தான் வாக்களிக்கிறார்களே தவிர, வாக்கு வங்கியாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறுவது ஒரு தவறான பார்வை.
தமிழக அரசியலில் சிறுபான்மைக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கிறதா?
தமிழகத்தில் சிறுபான்மைக் கட்சிகள் பொதுத் தளத்திலிருந்து விலகியும் இருக்கவில்லை; விலக்கி வைக்கப்படவும் இல்லை. தமிழகத்தின் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக கடந்த காலங்களில் முஸ்லிம் லீக் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு மமக அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறது.
நடிகர் விஜய் சிறுபான்மையினர் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?
ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார். ஏனென்றால், அவர் ஒரு தெளிந்த கொள்கை கோட்பாட்டுடன் செயல்படக்கூடியவராக தெரியவில்லை. அதற்கு அவர் மாநாட்டில் ஆற்றிய முதல் உரையே சான்று. பாசிசமா, பாயாசமா என்கிற அளவுக்குப் பேசும்போது, பாசிசமும் பாயாசமும் நிச்சயமாக ஒன்றல்ல. பாசிசம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாத அளவுக்கு அரசியல் ஞானம் உள்ளவராகவே அவரைப் பார்க்க முடிகிறது.
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பாஜக-வின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே... ஒருவேளை, அவர் அந்தப் பக்கம் போனால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு வருமா?
இன்றைய சூழலில், விஜய் எந்தப் பக்கம் போனாலும், திமுக-வுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடிய ஒரு சூழல்தான் இருக்கிறது. ஆகவே விஜய்யால் நிச்சயமாக திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறையாது; பிரகாசிக்கத்தான் செய்யும்
திமுக கூட்டணியில் இம்முறை கூடுதல் இடங்கள் கிடைக்காவிட்டால் கூட்டணி மாறுவீர்களா?
நாங்கள் கூடுதல் இடங்களைக் கேட்பது எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினை. அதேசமயம், யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக்கூடாது என்கிற கொள்கையும் எங்களுக்கு இருக்கிறது. இன்றைக்கு அதிமுக, பாஜக-வுடன் கைகோத்திருக்கிறது. தவெக-வின் கொள்கை குழப்பமாக இருக்கிறது. எனவே எங்களுக்கு கூட்டணி மாறும் நிலை ஏற்படாது.
எஸ்ஐஆரில் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகம் நீக்கப்படுவதாகக் புகார்கள் வருகிறதே?
வாக்காளர் சிறப்புத் திருத்தம் இப்போது நடப்பதற்கும் முந்தைய காலங்களில் நடந்ததற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. இப்போது, கேட்கப்படாத பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதன் மூலம் புறவாசல் வழியாக மக்களுடைய குடியுரிமையைச் சோதித்துப் பார்க்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பிஹாரில் நடந்ததை போல தமிழகத்தில் நடந்துவிடக் கூடாது.
2026 தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்தான மமக-வின் எதிர்பார்ப்பு என்ன?
மனிதநேய மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, சென்ற முறை எங்களுக்குக் கொடுத்த 2 இடங்களிலும் நாங்கள் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி மன்றங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது. அந்த அடிப்படையில், கூடுதல் இடங்களை எங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்க வேண்டும் என்பதை நிச்சயமாக வலியுறுத்துவோம்.
