

“திமுக தனது தவறான சித்தாந்தத்தை சினிமா மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. கருணாநிதி காலம் தொட்டு தற்போது இன்பநிதி காலம் வரை இது தொடர்கிறது.
சினிமா ஹீரோக்கள் அனைவரும் நிஜவாழ்க்கையிலும் ஹீரோக்கள் தான் என மக்கள் நம்பும் சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி விட்டது” என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...
திமுக-வுக்கும் பாஜக-வுக்கும் மறைமுக உறவு இருப்பதாக தவெக சொல்லிக் கொண்டே இருக்கிறதே..?
திமுக-வும் பாஜக-வும் ரகசிய உறவில் இருப்பதாக ஒரு அரசியல் கட்சி சொல்கிறது என்றால், அந்தக் கட்சியின் அரசியல் ஞானம், அறிவு எந்த அளவுக்கு தரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திமுக-வும், பாஜக-வும் அரசியலில் எதிரெதிர் துருவங்கள். கொள்கை ரீதியாக, சித்தாந்த ரீதியாக பாஜக-வுடன் திமுக-வுக்கு துளியும் சம்பந்தம் இல்லை. அதையெல்லாம் சமரசம் செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் பாஜக-வுக்கு கிடையாது. அப்படி நினைத்திருந்தால் நாங்கள் எப்போதோ தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியிருப்போம்.
அரசியல் கட்சி தலைவராக விஜய்யின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தவெக என்ற கட்சி தற்போது வரை ரசிகர் மன்றமாக மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஒரு படத்தின், முதல் நாள்... முதல் காட்சி போலத்தான் தவெக-வினர் இன்னமும் அரசியல் செய்கிறார்கள். கொலையில்கூட சாதி பார்த்து ஒரு இடத்துக்கு சென்றுவிட்டு, இன்னொரு இடத்துக்கு போகாத அரசியல்வாதியாக விஜய் இருந்து வருகிறார். ஆனால் நாங்கள், கவின்குமார் கொலைக்கும் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கும் ஒரே மாதிரியான நீதி வேண்டும் என்று தான் போராடினோம்.
இளைஞர்கள் தவெக-வை நோக்கி பெருவாரியாக நகர்கிறார்களே..?
அதற்குக் காரணம் திமுக தான். தமிழகத்தில் சினிமாவை ஒரு மதம் போல திமுக மாற்றிவிட்டது. அந்த மதத்தின் பின்னால், பெரும்பகுதியான மக்கள் செல்வதற்கு வழிவகுத்து, திமுக தனது தவறான சித்தாந்தத்தை சினிமா மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. கருணாநிதி காலம் தொட்டு தற்போது இன்பநிதி காலம் வரை இது தொடர்கிறது. சினிமா ஹீரோக்கள் அனைவரும் நிஜவாழ்க்கையிலும் ஹீரோக்கள் தான் என மக்கள் நம்பும் சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி விட்டது. இது தமிழகத்துக்கு திமுக செய்த மிகப்பெரிய துரோகம்.
சினிமா ஹீரோ என்பதைக் கடந்து விஜய் ரசிகர்கள் இப்போது அவரை ஒரு தலைவராக பார்க்கத் தொடங்கி விட்டார்களே..?
சினிமாவில் நடப்பது நிஜவாழ்க்கையில் நடப்பதில்லை. சினிமாவில், இப்படி 41 பேர் உயிரிழந்திருந்தால் அந்தப் படத்தினுடைய ஹீரோவின் செயல்பாடுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை ஹீரோ அடித்து துவம்சம் செய்திருப்பார். ஆனால், நிஜத்தில் என்ன நடந்தது? கரூர் சம்பவம் நடந்ததும் முதல் ஆளாக அங்கிருந்து ஓடியது நடிகர் விஜய் தான். ஆக, நடிகராக அவரை திரையில் ரசிக்கலாமே தவிர, தலைவராக பார்க்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக-வின் மதவாத அரசியல் பிஹாரில் எடுபடலாம். தமிழகத்தில் எடுபடாது என எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே..?
பிஹார் வெற்றிக்குக் காரணம், ‘வளர்ச்சி மாடல்’. காட்டாட்சி நடந்துவந்த பிஹாரில், அங்குள்ள மக்களின் மனப்பான்மையை மாற்றி, சாதியைக் கடந்து அரசியல் செய்து, வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையின் மூலமாக பாஜக-வின் அரசியல் வெற்றி சாத்தியமானது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக தான். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் சொன்ன பிறகும் இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்கிறது என்றால், இது திமுக-வின் மதவாத அரசியல் இல்லாமல் வேறென்ன?
சமூக வலைதளத்தில் நயினார், அண்ணாமலை ஆதரவாளர்கள் மோதிக் கொள்வதை கவனித்தீர்களா?
அவர்கள் யாருமே பாஜக-வினர் கிடையாது. இதெல்லாமே திமுக வார் ரூம் செய்யும் வேலை. திமுக தனது வார் ரூம் மூலமாக சமூக வலைதளத்தில், பாஜக-வினர் பெயரில் சில போலி கணக்குகளை உருவாக்கி, பாஜக-வுக்குள் உட்கட்சி பூசல்களை உண்டாக்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்து வருகிறது.
பாஜக கூட்டணிக்கு வேறு பெரிய கட்சிகள் ஏதும் வருகின்றனவா?
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை கூட்டணி அமைப்பதற்கு கால அவகாசம் இருக்கிறது. இது தேர்தலுக்கான கூட்டணி. வாக்குகளை பெறுவதற்காக அமைக்கப்பட கூடிய கூட்டணி. எனவே, சரியான நேரத்தில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும். இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
டிடிவி.தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் உங்கள் கூட்டணியில் மீண்டும் இணைவார்களா?
திமுக-விடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து இணையத்தான் போகிறார்கள்.
செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது உங்கள் கூட்டணியின் வெற்றியைப் பாதிக்குமா?
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் காலத்தில் செங்கோட்டையன் தவெக-வுக்குச் சென்றிருக்கிறார். இது தவெக-வுக்கு வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால், அரசியலில், இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறி தான். அதிமுக-வை பொறுத்தவரை அதன் உண்மையான ஸ்டார் யார் என்றால், இரட்டை இலை, எம்ஜிஆர், ஜெயலலிதா தான். இதை வைத்து தான் அதிமுக-வின் பலம் இருக்கிறது என்பதை பழனிசாமி போன்றவர்களே ஒப்புக்கொள்வார்கள். இது புரியாமல் சென்றிருப்பது செங்கோட்டையனுக்குத் தான் மிகப்பெரிய இழப்பாக இருக்கப் போகிறது.
தி.நகர் தொகுதியில் இம்முறை நீங்கள் போட்டியிடுவீர்கள் என எதிர்பார்க்கலாமா?
அந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில் அங்கு தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறேன். கூட்டணி அமைவதை பொறுத்து தி.நகர் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை கட்சி முடிவு செய்து அறிவிக்கும்.