“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை புதிய அரசு அறிந்துள்ளதா?” - கனிமொழி எம்.பி சந்தேகம்

“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை புதிய அரசு அறிந்துள்ளதா?” - கனிமொழி எம்.பி சந்தேகம்
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது” என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

இது குறித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது.

குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக எதிர்கக்ட்சிகள் பலவும் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்தினர். இந்நிலையில் மதுரையில் நடந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மதுரையில் நடந்தது என்ன? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டுவருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடியது.

கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே வடக்கு மாசிவீதி அருகே ஒரு கழிப்பறையில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாகத் தாக்கியபோது முத்துமணிக்கு  காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த  முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டி அதைச் செயல்படுத்தியது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை புதிய அரசு அறிந்துள்ளதா?” - கனிமொழி எம்.பி சந்தேகம்
கேப்டன்சி திறமை இல்லை: ரிஷப் பண்ட்டை குறிவைக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in