

சென்னை: “பெண்கள் கல்வி கற்று முன்னேறுமாறு திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழகம் ஊக்குவிக்கிறது; ஆனால், பெண்களை அடுப்படியை கவனித்துக் கொள்ள வட இந்தியா கட்டுப்படுத்துகிறது. இந்தி மட்டுமே கற்றுக் கொண்டால் வளர்ச்சி தடைபடும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினை ஏற்படும்” என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்தக் கருத்துக்காக தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று (ஜன.13) சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. தயாநிதி மாறன் கலந்துகொண்டனர். அந்த விழாவில் தயாநிதி மாறன் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தயாநிதி மாறன் பேசியது என்ன? - “நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம். இந்திய மாநிலங்களில் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தமிழகத்தில் திராவிட சிந்தனையை தீப்பொறியாக ஏற்றிய பெரியார், பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயலாற்றி வருகிறார்.
எங்கள் மாநில மாணவிகள் பெருமைப்பட வேண்டும் என்பதால்தான் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இங்கு பெண்களை முன்னேறுங்கள் என்கிறோம். பெண்கள் முன்னேற்றம்தான் தமிழகத்தின் முன்னேற்றம் என்று கருதுகிறோம்.
ஆனால், வட இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம், வீட்டின் அடுப்படியில் இருந்தால் போதும், குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் போதும் என்று நினைக்கின்றனர்.
இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தமிழகம் வருவதற்கு இங்கு கல்வியறிவுள்ளவர்கள் இருப்பதே காரணம். இந்தியை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதே நாட்டின் பிற பிராந்தியங்களில் வேலைவாய்ப்பின்மைக்கு வழிவகுக்கிறது.
தமிழகத்தின் திராவிட மாடல் பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் என்று பேதமில்லாமல் அனைவருக்கும் கல்விக்கான சம வாய்ப்பைத் தருகிறது. இதுதான் தமிழகத்தில் கல்வியறிவு விகிதத்தை உயர்த்தியதோடு, மாநிலத்தில் பணியாளர்கள் சக்தியில் பெண்களின் பங்களிப்பையும் அதிகரித்துள்ளது.
ஆங்கிலக் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவது மாணவர்களின் வாய்ப்புகள், எதிர்காலத்துக்கு முட்டுக்கட்டை போடும், மொழி ரீதியிலான தடைகள் எப்போதுமே வளர்ச்சிக்கு, வேலைவாய்ப்புக்கு தடை போடும்” என்று பேசியிருந்தார்.
இது குறித்து பாஜகவின் திருப்பதி நாராயணன் அளித்த பேட்டியில், “தயாநிதி மாறனுக்கு பொது உணர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. அவருடைய இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவருடைய கருத்துக்காக அவர் இந்திய மக்களிடம், குறிப்பாக இந்தி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தி பேசுபவர்களை கல்வியறிவு இல்லாதவர்கள் போல் சித்தரித்துள்ளார்” என்றார்.
தயாநிதி மாறன் குறித்து திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், “ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடக்கிறது என்பதைப் பொறுத்தே பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் அமைகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்றன. தமிழகத்தில் திமுக மகளிர் உரிமைக்காகப் போராடியது. இன்று மகளிர் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்காக குரல் கொடுத்தோம். அரசு வேலைகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ளது. திமுக இன்று, நேற்றல்ல காலங்காலமாகவே பெண்கள் உரிமைக்காகப் போராடி வருகிறது” என்றார்.