

சில மாதங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திமுக தூது அனுப்பியதாக செய்தி பரவியது. ஆனால், அதை அப்போது திட்டவட்டமாக மறுத்தார் தங்கமணி. இந்த நிலையில் அவரும் திமுக அமைச்சர் முத்துசாமியும் ஒன்றாக வந்து கோயிலில் வழிபாடு நடத்தியது மீண்டும் பல்வேறு ஊகங்களைப் படரவைத்திருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் தாஜ்நகரில் பிரசித்தி பெற்ற கொங்கு திருப்பதி கோயில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இக்கோயில் கடந்த நவம்பரில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியும் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியும் ஒன்றாக வந்து இக்கோயிலில் வழிபாடு நடத்தினர்.
வழிபாட்டை முடித்துவிட்டு வந்த அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம், “இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், இவர்களின் சந்திப்புக்கு ஆளாளுக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இக்கோயிலை அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது வாரியம். இதனால் கோயில் இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து கோயிலை திறக்கக் கோரி பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், இடத்துக்கான மதிப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால் கோயிலை அப்புறப் படுத்தி இடத்தைக் கையகப்படுத்தலாம் என அண்மையில் தீர்ப்பு வெளியானது.
தேர்தல் நேரத்தில் இதிலுள்ள சிக்கலை புரிந்து கொண்ட திமுக-வினர் கோயிலை அப்புறப்படுத்துவதை தடுக்க பலவாறாக முயற்சி எடுத்தனர். விஷயம் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பூட்டிக் கிடந்த கோயில் திறக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், அமைச்சர் முத்துசாமியும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் இந்தக் கோயிலுக்கு ஒன்றாக வந்து வழிபாடு நடத்தியது யதார்த்தமாக நடந்த ஒன்றா அல்லது இதற்குள் வேறு ஏதேனும் சமாச்சாரம் இருக்கிறதா என்று இப்போது காரசார விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.