

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிடுமா, அப்படி போட்டியிட்டால் யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினரை தாண்டி திமுகவினரிடையேயும் எழுந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக உள்ளார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்காக, தொகுதியில் வாரத்துக்கு ஒரு முறை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பழனிவேல் தியாகராஜன், அமைச்சராக பொறுப்பேற்றபோது, மத்திய தொகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சியை கொண்டு ஓரளவு நிறைவேற்றிவிட்டார். ஆனால், போதிய வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது.
கட்சி நிதி, தேர்தல் செலவு என்று கூறி யாரிடமும் இவர் நிதி வசூல் செய்வதில்லை என்ற நல்ல பெயர் இவருக்கு இருந்தாலும், இவரது ஆதரவு மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள், இவரது உதவியாளர்கள் சொத்துவரி முறைகேடு முதல் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி கைது, பதவி பறிப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், தொகுதிக்குட்பட்ட திமுக கவுன்சிலர்களை இவர் மதிக்கவில்லை என்ற மனக்குறை கட்சியினரிடையே உள்ளது. அதனால், தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மத்திய தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள், மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோரை அழைத்து மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மீண்டும் வெற்றிபெற வைக்க ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இங்கு 3-வது முறையாக போட்டியிடுவது உறுதியான நிலையில், பழனிவேல் தியாகராஜன் உற்சாகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரை தாண்டி திமுகவினரிடையேயும் எழுந்துள்ளது.
சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மன்னன், மதுரை மத்திய தொகுதி ‘சீட்’ தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அக்கட்சியில் இணைந்ததாகவும், அவர் அங்கு போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு திமுகவினரே மறைமுகமாக உதவுவார்கள் என்றும், மன்னனின் தேர்தல் பணி, திமுகவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மன்னனுக்கு ‘சீட்’ வழங்க மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவின் ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிரச்சினையைத் தவிர்க்க, இத்தொகுதியை வழக்கம்போல் கூட்டணிக் கட்சிக்கு அதிமுக தலைமை ஒதுக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.
சமூக வலைதளத்தில் அமைச்சர் உருக்கமான பதிவு:
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்தார். பின்னர், சமூக வலைதளத்தில் அவர் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘30 ஆண்டுகளாக வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்றும், கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தும் வந்த பின்பு, எனது முன்னோர்கள் காட்டிய வழியில் பொது வாழ்வில் நுழைந்தேன்.
10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் எனது சொந்த தொழில் துறைக்கு திரும்புவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், என் தொகுதி வாக்காளர்கள் முதல் தேர்தலில் அளித்த ஆதரவை விட அதிகமான வாக்குகளால் இரண்டாம் முறை வெற்றிபெறச் செய்தனர்.
அமைச்சரவையில் பணியாற்றும் அரிய வாய்ப்பை வழங்கினர். அதன் மூலம், மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்தது. எனது முன்னோர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை நினைவில் கொண்டு, அவர்கள் பாதையை பின்தொடர முடிவு செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.