அமைப்பு ரீதியிலான 110 மாவட்டங்கள் பட்டியல்: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை 10 மாவட்டங்களாக பிரிப்பு
அமைப்பு ரீதியிலான 110 மாவட்டங்கள் பட்டியல்: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்
Updated on
1 min read

சென்னை: திமுக மறுசீரமைப்புக்குழு வழங்கிய பரிந்துரைகளின்படி அமைப்புரீதியாக மாவட்டங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள், உடன்பிறப்புகள் ஆகிய 4 அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம் திமுக.

இவற்றை காலத்துக்கேற்ப புதுப்பித்து வந்திருக்கிறோம். அதன்படி கடந்த ஆக.22-ம் தேதி நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாக சீரமைப்புக்குத் தேவையான முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

திமுக தொடங்கப்பட்டது முதல், இதுவரை 15 முறை அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-வது அமைப்பு தேர்தலை நடத்தவும், பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

அதில் தற்போதுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைபடி மாநிலத்தில் உள்ள தொகுதிகள் 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதால் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த 110 மாவட்டங்களில் தற்போதுள்ள மாவட்டச்செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளை பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை, சென்னை வடகிழக்கு - திருவொற்றியூர், மாதவரம், சென்னை வடக்கு - பெரம்பூர், கொளத்தூர், சென்னை வடமேற்கு - ராயபுரம், ஆர்.கே.

நகர், சென்னை மத்திய - எழும்பூர் (தனி), அண்ணா நகர், சென்னை மத்திய கிழக்கு - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, சென்னை மத்திய மேற்கு - மதுரவாயல், அம்பத்தூர்.

சென்னை கிழக்கு - துறை முகம், திரு.வி.க.நகர் (தனி), வில்லிவாக்கம், சென்னை தென்மேற்கு - விருகம்பாக்கம், தி.நகர், சென்னை தென்கிழக்கு - சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சென்னை தெற்கு - சோழிங்கநல்லூர் என்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன.

அமைப்பு ரீதியிலான 110 மாவட்டங்கள் பட்டியல்: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்
மேட்டூர் அணை திறக்க விவசாயிகள் எதிர்ப்பு: நீர்மட்டம் 100 அடியை எட்டும் வரை காத்திருக்க வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in