

திருவாரூர்/தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்கிற அறிவிப்பால் பின்னாளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகே திறக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கை: டெல்டா பாசனத்துக்காக செப்.1-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 90 அடியாகத் தான் உள்ளது. இதனால், அணையில் இருந்து 40 முதல் 50 நாட்கள் வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இது சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது.
எனவே, அணைக்கு நீர்வரத்தும் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை இருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகோ அல்லது செப்.10-ம் தேதிக்கு பிறகோ பாசனத்துக்காக தண்ணீர் திறந்தால்தான் ஒரு போக சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுமையாக செய்ய முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணை திறப்புக்கு முன்னதாக வேளாண்மை துறை, நீர்பாசனத் துறை அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், செப்.1-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்ப்பாசனத் துறை அறிவித்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.
மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லை என்றால் பிற்பகுதியில் கதிர் வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மிகப்பெரிய பேரழிவை சந்திக்க வேண்டிவரும். மேலும், மேட்டூர் அணையிலிருந்து 45 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிட்டது சட்டத்துக்கு புறம்பானதாகும். இதுபோன்ற அறிவிப்பு, எதிர்காலத்தில் நமக்கான உரிமைகளை பெறுவதில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
இருக்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்தி எந்த வகையான பயிர்களை பயிரிடுவது என்பது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாட வேண்டும். நேரடி விதைப்பா அல்லது நடவா என்பது குறித்த தொழில்நுட்ப ஆலோசனையை வேளாண்மை துறை வழங்க வேண்டும். அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் தண்ணீர் திறப்பது பயனற்றதாகிவிடும்.
அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அதிகாரிகளாவது ஆலோசனைகளை வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் செப்.1-ம் தேதி அணையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.