

மதுரை: “திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் திமுக அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். மேலும், “தீபம் ஏற்றியிருந்தால் அன்றோடு பிரச்சினை முடிந்திருக்கும். அதை திமுக பேசுபொருளாக மாற்றியுள்ளது” என்று அவர் கூறினார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் சாதாரண விஷயம் தற்போது நாடு முழுவதும் அரசியல் நெருப்பைப் பற்ற வைத்துள்ளது. பல ஆண்டுகளாக மலை உச்சியில் தீபம் ஏற்றவில்லை, உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படுகிறது. உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கை. அதை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
நிர்வாகம் உயர்ந்ததா, நீதிமன்றம் உயர்ந்ததா என்றால் நீதிமன்றம்தான் உயர்ந்தது. அயோத்தி பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். யாரும் ஆட்சேபிக்கவில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில் திமுக அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை தடுத்து, அரசியலமைப்பு மீது திமுக வன்முறையை ஏவியுள்ளது. அரசியல் ரீதியாக இதற்கு திமுக பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்துக்களின் வாக்குகள் தங்களுக்கு வேண்டாம் என்று திமுக கருதுகிறது. யாரையோ திருப்திப்படுத்த இவ்வாறு செய்கிறார்கள். தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் மேல்முறையீடு செய்யவில்லை. காசி விஸ்வநாதர் கோயில் அருகில் மசூதி உள்ளது. அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இது தர்காவுக்கும், கோயிலுக்குமான பிரச்சனை இல்லை.
தற்போது நீதிபதி மேல் நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மென்ட்’ கொடுத்துள்ளனர். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதி மீது ‘இம்பீச்மென்ட்’ கொடுத்தது உலக வரலாற்றில் நடந்திராத ஒன்று. இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் உடந்தையாக உள்ளன. தீபம் ஏற்றியிருந்தால் அன்றோடு பிரச்சினை முடிந்திருக்கும். அதை திமுக பேசுபொருளாக மாற்றியுள்ளது.
எந்த ஊரில் மலை உச்சியில் தீபம் ஏற்றாமல், பாதி மலையில் தீபம் ஏற்றுகிறார்கள். திருவண்ணாமலையில் மலை உச்ச்சியில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் பாதியில் தீபம் ஏற்றினால், அதற்கு அர்த்தமே இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் மாநில தொல்லியல் துறை ஆய்வு செய்து ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது” என்று அவர் கூறினார்.